சென்னை: ஐ.எஸ்.எல்., சென்னை அணியில் மணிப்பூர் வீரர் பிகாஷ் யும்னம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 9வது சீசன் நடக்கிறது. இதில் இரு முறை கோப்பை வென்ற அணி சென்னை. இம்முறை இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் தலா 4 வெற்றி, 4 ‘டிரா’ செய்த சென்னை அணி 5 போட்டிகளில் தோற்றது. 16 புள்ளியுடன் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
இதனிடையே மணிப்பூரை சேர்ந்த மத்திய தற்காப்பு பகுதி இளம் வீரர் பிகாஷ் யும்னம் 19, சென்னை அணியில் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார். இந்தியாவின் 16, 19, 20 வயதுக்குட்பட்ட அணிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு தெற்காசிய சாம்பியன்ஷிப்பில் கோப்பை (20 வயது) வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். ஐ–லீக் தொடரில் 29 போட்டிகளில் பங்கேற்ற பிகாஷ், 2000 நிமிடம் விளையாடிய அனுபவம் கொண்டவர்.
இவர் கூறுகையில்,‘‘ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்த சென்னை அணி நிர்வாகத்துக்கு நன்றி. சென்னை அணிக்காக விளையாட உள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது,’’ என்றார்.