ரியாத்: அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சியை சவுதியின் அல்–ஹிலால் கிளப் அணி ரூ. 2644 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ , 37. சமீபத்தில், சவுதி அரேபியாவின் அல்–நாசர் கிளப் அணியில் இணைந்தார். 2.5 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர், ஆண்டுக்கு ரூ. 1740 கோடி சம்பளம் பெறுகிறார். இதன் மூலம், கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆன வீரர் என்ற சாதனை படைத்தார். இவரது சக போட்டியாளராக கருதப்படுபவர் அர்ஜென்டினாவின் மெஸ்சி, 35. சமீபத்தில், கத்தாரில் நடந்த உலக கோப்பை தொடரில் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்தார். மொத்தம் 7 கோல் அடித்து ‘கோல்டன் பால்’ விருது வென்றார். தற்போது, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஒப்பந்தம் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ளது.
சம்பளம் எவ்வளவு: இதன்பின், சவுதியை சேர்ந்த அல்–ஹிலால் கிளப் அணியில் மெஸ்சி இணைய உள்ளாராம். இதற்கு சம்பளமாக ஆண்டுக்கு ரூ. 2644 கோடி சம்பளம் தரப்பட உள்ளதாக தெரிகிறது. ரொனால்டோவை முந்தி மெஸ்சி சம்பள விஷயத்தில் முதலிடம் பெறலாம். மறுபுறம், இரு அணிகளும் (அல்–நாசர், அல்–ஹிலால்) சவுதியை சேர்ந்தது என்பதால், சவுதி புரோ கால்பந்து லீக் போட்டிகளில் ரொனால்டோ– மெஸ்சி நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது.