மும்பை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த மும்பை அணி 4–0 என கேரளாவை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை, கேரளா அணிகள் மோதின.
துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மும்பை அணிக்கு 4வது நிமிடத்தில் பெரேரா டயஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய மும்பை அணிக்கு கிரெக் ஸ்டீவர்ட் (10வது நிமிடம்), பிபின் சிங் (16வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய பெரேரா, 22வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் மும்பை அணி 4–0 என வலுவான முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் கடைசி நிமிடம் வரை போராடிய கேரளா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மும்பை அணி 4–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை விளையாடிய 13 போட்டியில், 10 வெற்றி, 3 ‘டிரா’ என, 33 புள்ளிகளுடன் மும்பை அணி முதலிடத்துக்கு முன்னேறியது. ‘நடப்பு சாம்பியன்’ ஐதராபாத் அணி (31 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. கேரளா அணி 25 புள்ளிகளுடன் (8 வெற்றி, ஒரு ‘டிரா’, 4 தோல்வி) 3வது இடத்தில் நீடிக்கிறது.