மிர்புர்: முதல் ஒருநாள் போட்டியில் ‘பேட்டிங்கில்’ சொதப்பியது இந்திய அணி. கடைசி கட்டத்தில் ‘பவுலிங்கும்’ தடுமாற, வெற்றி திசை மாறியது. வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அதிசய வெற்றி பெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மிர்புரில் நடந்தது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் சென்(ம.பி.,) அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
ராகுல் அரைசதம்: இந்திய அணியின் ‘பேட்டர்கள்’ ஏனோதானோ என விளையாடினர். அனுபவ தவான்(7) விரைவில் வெளியேறினார். போட்டியின் 11வது ஓவரை வீசிய சாகிப் அல் ஹசன் இரட்டை ‘அடி’ கொடுத்தார். 2வது பந்தில் ரோகித்(27) போல்டானார். 4வது பந்தை கோஹ்லி துாக்கி அடித்தார். அதை ‘எக்ஸ்டிரா கவர்’ திசையில் பறந்து சென்று ஒரே கையில் ‘கோல்கீப்பர்’ போல லிட்டன் தாஸ் பிடித்தார். கோஹ்லி(9) அதிர்ச்சியுடன் நடையை கட்டினார். பின் ‘வேகத்தில்’ மிரட்டிய எபாடத் ஹூசைன் பந்தில் ஸ்ரேயாஸ்(24) அவுட்டானார். அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் விளாசிய ராகுல் நம்பிக்கை தந்தார். சாகிப் வலையில் ‘டெயிலெண்டர்கள்’ சிக்கினர். அரைசதம் கடந்த ராகுல்(73) அவுட்டாக, ஸ்கோர் உயர வாய்ப்பு இல்லாமல் போனது. கடைசி 6 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு இழந்தது. இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் ‘சுழலில்’ மிரட்டிய சாகிப் 5, ‘வேகத்தில்’ அசத்திய எபாடத் 4 விக்கெட் வீழ்த்தினர்.
திணறல் துவக்கம்
சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணியும் திணறியது. துவக்கத்தில் இந்திய பவுலர்கள் மிரட்டினர். தீபக் சகார் வீசிய முதல் பந்தில் ஷன்டோ(0) அவுட்டானார். சிராஜ் ‘வேகத்தில்’ அனாமுல்(14) வீழ்ந்தார். வாஷிங்டன் வலையில் லிட்டன்(41) சிக்கினார். பின் வாஷிங்டன் பந்தை துாக்கி அடித்தார் சாகிப்(29). இதனை ‘எக்ஸ்டிரா கவர்’ திசையில் நின்ற கோஹ்லி அப்படியே ஒற்றை கையில் பிடித்து அசத்தினார். சிராஜ், குல்தீப் சென், சகார் ‘வேகத்தில்’ மற்ற விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. வங்கதேச அணி 39.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன் எடுத்து தத்தளித்தது. இன்னும் ஒரு விக்கெட் சாய்த்தால் போதும் என்ற நிலையில், இந்தியாவின் வெற்றி கைக்கு எட்டும் துாரத்தில் இருந்தது.
அந்த அரை மணி நேரம் : இந்த சமயத்தில் மெஹிதி ஹசன் மிராஜ் அதிசயம் நிகழ்த்தினார். இவருக்கு முஸ்தபிஜுர் ஒத்துழைப்பு தர, ஸ்கோர் சீராக உயர்ந்தது. கடைசி அரை மணி நேரத்தில் இந்திய அணி தடுமாறியது. பவுலர்கள் வீணாக பதட்டம் அடைந்தனர். ‘வைடு’, ‘நோ–பால்’ வீசினர். ராகுல் உள்ளிட்ட வீரர்கள் ‘பீல்டிங்கில்’ சொதப்பினர். ‘ஓவர் த்ரோ’, மெஹிதி கொடுத்த எளிய ‘கேட்ச்சை ராகுல் கோட்டைவிட்டது என தவறுகள் தொடர்ந்தன. இதனை பயன்படுத்திய மெஹிதி, குல்தீப் ஓவரில் 2 சிக்சர் அடித்தார். சகார் ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். மெஹிதி– முஸ்தபிஜுர், 10வது விக்கெட்டுக்கு 41 பந்தில் 51 ரன் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர். வங்கதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 187 ரன் எடுத்து எதிர்பாராத வெற்றியை பெற்றது. மெஹிதி(38), முஸ்தபிஜுர்(10) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் சிராஜ் அதிபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருதை மெஹிதி வென்றார்.
ரிஷாப் பன்ட் விடுவிப்பு
வங்தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட் 25, இடம் பெற்றிருந்தார். முதல் போட்டி துவங்குவதற்கு முன் இவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான காரணம் கூறப்படவில்லை. மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி விடுவிக்கப்பட்டார் என்று மட்டும் தெரிவித்தது. தவிர, இவருக்கு மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை. இவர், டெஸ்ட் தொடருக்கு முன் அணியில் இணைய உள்ளார்.
51 ரன்
மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தபிஜுர் ரஹ்மான் ஜோடி, ஒருநாள் போட்டி அரங்கில் 10வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்து வெற்றி தேடித்தந்த வங்கதேச ஜோடியானது. கடந்த 2005ல் கொழும்புவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் வங்கதேசத்தின் கலீத், தபாஷ் ஜோடி 10வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தது. ஆனால் இப்போட்டியில் வங்கதேச அணி தோல்வியை தழுவியது.
குல்தீப் சென் அறிமுகம்
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் சென் அறிமுகமானார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர், 5 ஓவரில், 37 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார். இதுவரை 17 முதல் தரம் (52 விக்கெட்), 14 ‘லிஸ்ட் ஏ’ (27 விக்கெட்), 30 ‘டி–20’ (22 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். உள்ளூர் போட்டியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடும் இவர், ஐ.பி.எல்.,தொடரில் ராஜஸ்தான் அணியில் உள்ளார். தவிர இவர், மணிக்கு 145 கி.மீ., வேகத்தில் பந்துவீசக்கூடியவர்.