Advertisement


அர்ஜென்டினாவை ‘அடிச்சு துாக்கிய’ சவுதி அரேபியா * உலக கால்பந்தில்...

நவம்பர் 22, 2022 17:54
 Comments  
 


FIFA Football World cup, 2022, Qatar Argentina, messi
 

தோஹா: உலக கோப்பை கால்பந்து தொடரில் மிகப் பெரும் அதிர்ச்சி. இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, சவுதி அரேபியாவிடம் 1–2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. 

கத்தாரில் 22வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று லுாசெய்ல் மைதானத்தில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி(உலக ரேங்கிங்கில் 3வது இடம்), சவுதி அரேபியாவை(51வது இடம்) எதிர்கொண்டது. 

மெஸ்சி கோ....ல்:

இதில் வலுவான அர்ஜென்டினா எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்ப முதல் பாதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் ‘பெனால்டி ஏரியா’வில் வைத்து சவுதி வீரர் அப்துல் ஹமீது, அர்ஜென்டினாவின் ‘மிட்– பீல்டர்’ லியாண்ட்ரோ பரேதஸ் ‘ஜெர்சி’யை இழுத்து கீழே தள்ளினார். உடனே நடுவர், ‘வார்’ தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்தார். ‘ரீப்ளே’வில் ‘பவுல்’ செய்தது உறுதி செய்யப்பட, அர்ஜென்டினாவுக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு தரப்பட்டது. இதில் கேப்டன் மெஸ்சி மிகவும் ‘கூலாக’ பந்தை இடது பக்கமாக உதைத்து கோல் அடித்தார். 22வது நிமிடத்தில் மெஸ்சி அடித்த கோல் ‘ஆப்–சைடு’ ஆனதால், நிராகரிக்கப்பட்டது. 24வது நிமிடத்தில் டி மிரியா அடித்த கோலும் ‘அப்–சைடு’ ஆனது. 28வது நிமிடத்தில் லாடேரா மார்டினஸ் அடித்த கோலும் ‘வார்’ தொழில்நுட்ப ஆய்வில் நிராகிரிக்கப்பட்டது. முதல் பாதியில் அர்ஜென்டினா 1–0 என முன்னிலை பெற்றது. 

சவுதி அரேபியா எழுச்சி

இரண்டாவது பாதியில் எதிர்பார்ப்புக்கு மாறாக சவுதி அரேபியா மிரட்டியது. 48வது நிமிடத்தில் அர்ஜென்டினா தற்காப்பு வீரர் ரொமேராவை மடக்கிய சவுதி வீரர் சலே அல் ஷேஹ்ரி ஒரு ‘சூப்பர்’ கோல் அடித்தார். 53வது நிமிடத்தில் சலீம் அல் தாவ்சாரி வலது காலால் அடித்த ‘பவர்புல் ஷாட்’ அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸ் விரலில் பட்டு வலைக்குள் புகுந்தது. இந்த மகிழ்ச்சியில் அல் தாவ்சாரி மைதானத்தில் ‘டைவ்’ அடித்து மகிழ்ந்தார். சவுதி 2–1 என முன்னிலை பெற்றது. பின் சவுதி வீரர்கள் தற்காப்பு ஆட்டத்தில் இறங்கினர். ‘துாணாக’ நின்ற சவுதி கோல்கீப்பர் முகமது அல் ஓவெய்ஸ் துணிச்சலாக 5 வாய்ப்புகளை தடுக்க, அர்ஜென்டினா நம்பிக்கை தகர்ந்தது. இறுதியில் சவுதி அரேபிய அணி 2–1 என்ற கணக்கில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. 

 

‘பினிஷிங்’ இல்லை

அர்ஜென்டினா வீரர்களிடம் நேற்று கச்சிதமாக கோல் அடிக்கும் ‘பினிஷிங்’ திறன் இல்லை. இவர்கள் வசம் பந்து 69 சதவீதம் இருந்தும் பலன் கிடைக்கவில்லை. அதிர்ஷ்டமும் இல்லை. முதல் பாதியில் மட்டும் 7 கோல் வாய்ப்புகள் ‘ஆப்–சைடு’ ஆனது. 35 வயதான மெஸ்சி ஆட்டம் முன்பு போல துடிப்பாக இல்லை. இனி மெக்சிகோ, போலந்தை வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

வரலாறு திரும்புமா

கத்தார் தொடரில் வென்ற முதல் ஆசிய அணியானது சவுதி அரேபியா. தவிர, உலக கோப்பை வரலாற்றில் தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவை வென்ற முதல் ஆசிய அணியானது. உலக கோப்பை அரங்கில் அர்ஜென்டினாவை வென்ற அணிகள் கோப்பை (2014ல் ஜெர்மனி, 2018ல் பிரான்ஸ்) கைப்பற்றின அல்லது பைனலுக்கு(2018ல் குரோஷியா) முன்னேறியுள்ளன. இதே போன்று சவுதி அரேபியாவும் வரலாறு படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

முற்றுப்புள்ளி

அர்ஜென்டினா அணி 2019ல் இருந்து, 36 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியே சந்திக்கவில்லை.  2021ல் கோபா அமெரிக்கா கோப்பையையும் வென்றது. இந்த வெற்றிநடைக்கு சவுதி அரேபியா நேற்று முற்றுப்புள்ளி வைத்தது.

 

பழைய நினைவுகள்...

மாரடோனா தலைமையில் 1986ல் அர்ஜென்டினா அணி கோப்பை வென்றது. பின் 1990ல் ‘நடப்பு சாம்பியனாக’ களமிறங்கியது. அப்போது முதல் போட்டியில் காமரூனிடம் தோல்வி அடைந்தது. இதே போல் இம்முறை சவுதி அரேபியாவிடம் தோற்றுள்ளது. 

 

முதல் வீரர்

நேற்று ‘பெனால்டி’ மூலம் கோல் அடித்த மெஸ்சி, நான்கு உலக கோப்பை தொடரிலும்(2006, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் அர்ஜென்டினா வீரர் என்ற பெருமை பெற்றார். தவிர, பீலே(பிரேசில்), சீலர்(ஜெர்மனி), குளோஸ்(ஜெர்மனி), கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு(போர்ச்சுகல்) பின் நான்கு தொடர்களில் கோல் அடித்த 5வது வீரரானார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?