Advertisement


உலக கோப்பை வென்றது இங்கிலாந்து: பைனலில் பாகிஸ்தானை வீழ்த்தியது

நவம்பர் 13, 2022 15:28
 Comments  
 


ICC T20 World Cup 2022, T20 Cricket, Final, England Beat Pakistan, Ben Stokes, Sam Curran
 
மெல்போர்ன்: ‘டி–20’ உலக கோப்பையை ஜோராக வென்றது இங்கிலாந்து. பவுலிங்கில் சாம் கர்ரான், பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ் மிரட்டினர். பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்துடன் ஆறுதல் தேடியது.

 

ஆஸ்திரேலியாவில் எட்டாவது ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடந்தது. அரையிறுதியுடன் இந்தியா வெளியேறியது. மெல்போர்னில் நடந்த பைனலில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழை எட்டிக் கூட பார்க்கவில்லை. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் சாமர்த்தியமாக ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

 

திணறல் துவக்கம்: ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க, இங்கிலாந்து பவுலர்கள் பட்டையை கிளப்பினர். ‘வேகப்புயல்’ சாம் கர்ரான் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் பந்துவீசினார். மறுபக்கம் ‘லெக் ஸ்பின்னர்’ அடில் ரஷித் மணிக்கு 75 கி.மீ., வேகத்தில் வீசினார். இப்படி ‘வேகம்’, ‘சுழல்’ அலை வீச, பாகிஸ்தான் துவக்கத்திலேயே திணறியது. கேப்டன் பாபர், ரிஸ்வான் ரன் எடுக்க முடியாமல் தவித்தனர். சாம் கர்ரான் பந்தில் ரிஸ்வான்(15) போல்டானார். ‘பவர்பிளே’(முதல் 6 ஓவர்) முடிவில் பாகிஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 39 ரன் தான் எடுத்தது.

 

இந்த நேரத்தில் அடில் ரஷித் வீசிய முதல் பந்தில் முகமது ஹாரிஸ்(8) சிக்கினார். லிவிங்ஸ்டன் ஓவரில் மசூத் ஒரு சிக்சர் பவுண்டரி அடித்தார். மீண்டும் பந்துவீச வந்த ரஷித், ‘கூக்ளி’யில் அவரிடமே ‘கேட்ச்’ கொடுத்து கேப்டன் பாபர்(32) வெளியேறினார். ஸ்டோக்ஸ் பந்தில் இப்திகர்(0) அவுட்டாக, பாகிஸ்தான் 13 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 90 ரன் எடுத்து தத்தளித்தது. தொடர்ந்து இங்கிலாந்து பவுலர்கள் பிடியை இறுக்க, ரன் வறட்சி ஏற்பட்டது. 

ஓரளவுக்கு போராடிய மசூத்(38), சாம் கர்ரானிடம் சரணடைந்தார். ஜோர்டான் பந்துவீச்சில் ஷதாப் கான்(20) காலியானார். ‘டெயிலெண்டர்’களும் சோபிக்க தவற, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன் மட்டும் எடுத்தது. ஷாகீன் அப்ரிதி(5), ஹாரிஸ் ராப்(1) அவுட்டாகாமல் இருந்தனர். 

இங்கிலாந்து சார்பில் சாம் கர்ரான் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

ஸ்டோக்ஸ் அரைசதம்: போகிற போக்கில் எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. ‘வேகப்புயல்’ ஷாகீன் அப்ரிதியின் முதல் ஓவரில் ஹேல்ஸ்(1) போல்டனார். நசீம் ஷா வீசிய அடுத்த ஓவரில் பட்லர் 2, சால்ட் 1 பவுண்டரி அடித்தனர். ஹாரிஸ் ராப் பந்துவீச்சில் சால்ட்(10), கேப்டன் பட்லர்(26) அவுட்டாக, 6 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்தது. புரூக் 20 ரன்கள் எடுத்தார்.

 

பின் ஸ்டோக்ஸ், மொயீன் அலி அசத்தினர். குறைவான இலக்கு என்பதால் இருவரும் ‘ரிலாக்சாக’ ஆடினர். 5வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தனர். வாசிம் ஓவரில் மொயீன் அலி 3 பவுண்டரி அடிக்க, இங்கிலாந்து வெற்றியை விரைவாக நெருங்கியது. மொயீன் 19 ரன்களுக்கு அவுட்டானார். 19வது ஓவரில் வாசிம் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஸ்டோக்ஸ் அரைசதம் எட்டினார். இதே ஓவரின் கடைசி பந்தை ஒரு ரன்னுக்கு விரட்டிய இவர், வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘டி–20’ உலக கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது. துாணாக நின்று ஆடிய ஸ்டோக்ஸ்(52 ரன், 5 பவுண்டரி, 1 சிக்சர்), லிவிங்ஸ்டன்(1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

80,462 ரசிகர்கள்

மொல்போர்ன் மைதானத்தில், பைனலை 80,462 ரசிகர்கள் கண்டு களித்தனர்.

 

காயம் செய்த மாயம்

‘வேகப்புயல்’ ஷாகீன் அப்ரிதிக்கு ஏற்பட்ட காயம் பாகிஸ்தானுக்கு பேரிடியாக அமைந்தது. போட்டியின் 13வது ஓவரை வீசினார் ஷதாப். இதன் 3வது பந்தை புரூக் துாக்கி அடிக்க, ஷாகீன் அப்ரிதி பிடிக்க, அவுட்டானார். அப்போது அப்ரிதியின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின் மீண்டும் களமிறங்கிய இவர், 16வது ஓவரை வீசினார். முதல் பந்துக்கு பிறகு வலியால் துடித்தார். தொடர்ந்து பந்துவீச முடியவில்லை. எஞ்சிய 5 பந்துகளை ‘பார்ட்–டைம்’ பவுலரான இப்திகர் வீசினார். இதனை பயன்படுத்திய ஸ்டோக்ஸ் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, மொத்தம் 13 ரன்கள் எடுக்கப்பட்டன. நட்சத்திர பவுலரான ஷாகீன் அப்ரிதி தனது கடைசி இரு ஓவர்களை முழுமையாக வீச முடியாதது பாகிஸ்தான் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

 

இரண்டாவது முறை

பைனலில் பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி, இரண்டாவது முறையாக ‘டி–20’ உலக கோப்பை வென்றது. இதற்கு முன், 2010ல் பிரிட்ஜ்டவுனில் (வெஸ்ட் இண்டீஸ்) நடந்த பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதன்மூலம் அதிக முறை (2) ‘டி–20’ உலக கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை வெஸ்ட் இண்டீசுடன் (2012, 2016) பகிர்ந்து கொண்டது.

 

முதல் அணி

2019ல் உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இங்கிலாந்து அணி, தற்போது ‘டி–20’ உலக கோப்பை வென்றுள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில், 50 ஓவர், ‘டி–20’ உலக கோப்பை தொடர்களில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை பெற்ற முதல் அணியானது.

 

1992க்கு பதிலடி

மெல்போர்னில், 1992ல் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) பைனலில், இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பை வென்றது. இத்தோல்விக்கு, 30 ஆண்டுகளுக்கு பின் மெல்போர்னில் நேற்று இங்கிலாந்து பதிலடி கொடுத்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?