சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய பெண்கள் அணி ஏழாவது வெற்றி பெற்றது.
சென்னை, மாமல்லபுரத்தில், செஸ் ஒலிம்பியாட் 44வது சீசன் நடக்கிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று 7வது சுற்று போட்டிகள் நடந்தன. ஓபன் பிரிவில் ‘நம்பர்–2’ ஆக உள்ள இந்திய ‘ஏ’ அணி, 16 இந்திய ‘சி’ அணியை எதிர்கொண்டது. கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ‘ஏ’ அணியின் நாராயணன், 38 வது நகர்த்தலில் அபிமன்யுவை வென்றார். அர்ஜுன், 46வது நகர்த்தலில் அபிஜீத் குப்தாவை வீழ்த்தினார். விதித் சந்தோஷ் குஜ்ராத்தி–சேதுராமன், ஹரிகிருஷ்ணா, சூர்யசேகர் கங்குலி மோதிய போட்டிகள் ‘டிரா’ ஆகின. இந்திய ‘ஏ’ அணி 3.0–1.0 என, ஐந்தாவது வெற்றியை (2 ‘டிரா’) பதிவு செய்தது.
* 11வது இடத்திலுள்ள இளம் இந்தியா ‘பி’ அணி, கியூபாவை (32வது) சந்தித்தது. தமிழக வீரர் குகேஷ், 46 வது நகர்த்தலில் கார்லோசை வீழ்த்தினார். இத்தொடரில் குகேஷ் பெற்ற 7வது வெற்றி இது. கருப்பு நிற காய்களுடன் விளையாடிய தமிழகத்தின் மற்றொரு வீரர் பிரக்ஞானந்தா, சுவாரசை 41வது நகர்த்தலில் வென்றார். நிகால் சரின், பெரெசை சாய்த்தார். அதிபன் ‘டிரா’ செய்தார்.
இந்திய ‘பி’ அணி 3.5–0.5 என ஆறாவது வெற்றி (1 ‘டிரா’) பெற்றது.
ஏழாவது வெற்றி
பெண்கள் பிரிவில் ‘நம்பர்–1’ இந்திய அணி, 6வது இடத்திலுள்ள வலிமையான அஜர்பெய்ஜானுடன் மோதியது. ஹம்பி, குனேவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஹரிகா ‘டிரா’ செய்ய, தானியா, வைஷாலிக்கு வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதற்கேற்ப தானியா, 63வது நகர்த்தலில் படாலியேவை வென்றார். கடைசி போட்டியில் வைஷாலி, 72வது நகர்த்தலில் வென்றார்.
இந்திய ‘ஏ’ அணி தொடர்ந்து 7வது வெற்றியை பதிவு செய்தது.
அதிர்ச்சி தோல்வி
‘நம்பர்–11’ இந்திய ‘பி’ அணி, கிரீசை (27 வது) சந்தித்தது. திவ்யா, ஹரிட்டோமனியை வீழ்த்த, மேரி ஆன் கோம்ஸ் ‘டிரா’ செய்தார். மற்ற இரு வீராங்கனைகள் சவுமியா, வந்திகா தங்களது போட்டியில் தோல்வியடைந்தனர். இந்திய ‘பி’ அணி 1.5–2.5 என்ற கணக்கில் இரண்டாவது தோல்வியை (4 வெற்றி, 1 ‘டிரா’) பதிவு செய்தது.
* மற்றொரு போட்டியில் 16வது இடத்திலுள்ள இந்திய ‘சி’ அணி, சுவிட்சர்லாந்தை (29வது) எதிர்கொண்டது. இந்தியாவின் நந்திதா, ஈஷா வெற்றி பெற, பிரதியுஷா, விஷ்வா ‘டிரா’ செய்தனர். இந்திய ‘சி’ அணி (3.0-1.0) 5வது வெற்றி (1 ‘டிரா’, 1 தோல்வி) பெற்றது.