பர்மிங்காம்: காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் என சாதனை படைத்தார் தேஜஸ்வின் சங்கர்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. ஆண்கள் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார். நான்காவது வாய்ப்பில், ஒரே முயற்சில் அதிகபட்சம் 2.22 மீ., தாண்டினார். இதே அளவு உயரத்தை பஹாமசின் டொனால்டு 2 வது முயற்சி, இங்கிலாந்தின் ஜோயல் கிளார்க், 3வது முயற்சியில் தாண்டினர். இதையடுத்து மூன்றாவது இடத்தை உறுதி செய்த சங்கர், வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் என சாதனை படைத்தார்.
இவர் கடந்த 2018 கோல்டு கோஸ்ட் போட்டியில் 2.24 மீ., தாண்டி, ஆறாவது இடம் பிடித்து இருந்தார்.
இதற்கு முன் 1970, எடின்பரோ போட்டியில் பீம் சிங், 2.06 மீ., உயரம் தாண்டி, நான்காவது இடம் பெற்றதே இந்தியரின் சிறந்த செயல்பாடாக இருந்தது.
உதவிய நீதிமன்றம்
காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி பெற தேவையான 2.27 மீ., உயரம் தாண்டியவர் தேஜஸ்வின் சங்கர். ஆனால் சென்னை தடகளத்தில் பங்கேற்கவில்லை என்பதால் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்திய தடகள கூட்டமைப்பின் முடிவை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார். கடைசி நேரத்தில் ஆரோக்கிய ராஜித் ‘பிட்னஸ்’ பிரச்னையால் விலக, ஒரு மாத போராட்டத்துக்குப் பின், 36 பேர் கொண்ட அணியில் சங்கர் சேர்க்கப்பட்டார். தற்போது வரலாறு படைத்துள்ளார்.
காலிறுதியில் தீபிகா ஜோடி
ஸ்குவாஷ் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் தீபிகா பல்லீகல், சவுரவ் கோஷல் ஜோடி, வேல்சின் எமிலி, பீட்டர் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 11–8, 11–4 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அபே சிங் ஜோடி, ஐவரியின் லுகா, சாப்மன் ஜோடி 2–0 என வென்றது.
* பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சுனைனா சாரா, அனாஹத் ஜோடி 11–9, 11–4 என இலங்கை ஜோடியை சாய்த்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தது.
* கலப்பு இரட்டையரில் ஜோஷ்னா, ஹரிந்தர் ஜோடி 8–11, 9–11 என ஆஸ்திரேலிய ஜோடியிடம் வீழ்ந்தது.