சென்னை: செஸ் ஒலிம்பியாட் பெண்களுக்கான 7வது சுற்றில் இன்று இந்தியா ‘ஏ’, அஜர்பெய்ஜான் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில், செஸ் ஒலிம்பியாட் 44வது சீசன் நடக்கிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை 6 சுற்றுகள் முடிந்துள்ளன. ஓபன் பிரிவில் 6 போட்டியிலும் வென்ற ஆர்மேனியா அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடங்களில் அமெரிக்கா (5 வெற்றி, ஒரு ‘டிரா’), இந்தியா ‘பி’ (5 வெற்றி, ஒரு தோல்வி) அணிகள் உள்ளன. மற்ற இந்திய அணிகளான இந்தியா ‘ஏ’ (4 வெற்றி, 2 ‘டிரா’), இந்தியா ‘சி’ (5 வெற்றி, ஒரு தோல்வி) அணிகள் முறையே 6, 9வது இடத்தில் உள்ளன.
பெண்கள் பிரிவில் 6 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்தியா ‘ஏ’ அணி உள்ளது. அடுத்த இரு இடங்களில் முறையே அஜர்பெய்ஜான் (5 வெற்றி, ஒரு ‘டிரா’), ருமேனியா (5 வெற்றி, ஒரு ‘டிரா’) அணிகள் உள்ளன. மற்ற இந்திய அணிகளான இந்தியா ‘பி’ (4 வெற்றி, ஒரு ‘டிரா’, ஒரு தோல்வி), இந்தியா ‘சி’ (4 வெற்றி, ஒரு ‘டிரா’, ஒரு தோல்வி) முறையே 15, 19வது இடத்தில் உள்ளன.
இன்று 7வது சுற்று போட்டிகள் நடக்கவுள்ளன. பெண்கள் பிரிவில் வைஷாலி, கொனேரு ஹம்பி, ஹரிகா, தானியா அடங்கிய இந்தியா ‘ஏ’ அணி, வலிமையான அஜர்பெய்ஜானை சந்திக்கிறது. இந்திய வீராங்கனைகள் சாமர்த்தியமாக விளையாடும் பட்சத்தில், தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்து சாம்பியன் பட்டத்துக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளலாம். மற்ற போட்டிகளில் இந்தியா ‘பி’ – கிரீஸ், இந்தியா ‘சி’ – சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.
ஓபன் பிரிவில் ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, சசிகிரண், அர்ஜூன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இந்தியா ‘ஏ’ அணி, சேதுராமன், அபிஜீத் குப்தா, அபிமன்யு புரானிக், சூர்ய சேகர் கங்குலி ஆகியோர் அடங்கிய இந்தியா ‘சி’ அணியை எதிர்கொள்கிறது. தமிழகத்தின் பிரக்ஞானந்தா, குகேஷ், பாஸ்கரன் அதிபன், நிகால் சரின் இடம் பெற்றுள்ள இந்தியா ‘பி’ அணி, கியூபாவை எதிர்கொள்கிறது.