ஹாலிபாக்ஸ்: உலக பாரா துடுப்பு படகு போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா வெள்ளி வென்றார்.
கனடாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா துடுப்பு படகு (‘கனோ’) சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பெண்களுக்கான 200 மீ., ‘வி.எல்., 1’ பிரிவில் பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 34.18 வினாடியில் கடந்த இந்தியாவின் பூஜா ஓஜா, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் உலக பாரா துடுப்பு படகு போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பூஜா, 6 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக பாரா துடுப்பு படகு சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியரான இவர், உலக தரவரிசையில் 9வது இடத்தில் உள்ளார்.
முதலிடம் பிடித்த ஜெர்மனியின் லில்லிமோர் கோப்பர் (ஒரு நிமிடம், 29.79 வினாடி) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு ஜெர்மனி வீராங்கனை எஸ்தர் போடே (ஒரு நிமிடம், 35.16) 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
ஆண்களுக்கான 200 மீ., ‘வி.எல்., 1’ பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் சுரேந்தர் குமார், இலக்கை ஒரு நிமிடம், 22.97 வினாடியில் கடந்து 5வது இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் பென்ஜமின் சைன்ஸ்பரி (ஒரு நிமிடம், 10.25 வினாடி) தங்கம் வென்றார்.