காலி: ஜூனியர் உலக தடகள (20 வயது) 400 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ரூபல் பைனலுக்கு முன்னேறினார்.
கொலம்பியாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் பிரியா மோகன், ரூபல் சவுத்ரி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
அரையிறுதியில் மொத்தம் 24 பேர், மூன்று பிரிவுகளாக பங்கேற்றனர். அரையிறுதி–2ல் பங்கேற்ற ரூபல் 17, பந்தய துாரத்தை 52.27 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து நேரடியாக பைனலுக்கு முன்னேறினார். அரையிறுதி–1ல் களமிறங்கிய மற்றொரு இந்திய வீராங்கனை பிரியா 19, இலக்கை 53.22 வினாடியில் அடைந்து 5வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்தமாக 10வது இடம் பிடித்த இவர், பைனல் வாய்ப்பை இழந்தார்.
இம்முறை இந்தியாவுக்கு ஒரே ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு அணிகளுக்கான 4*400 மீ., ‘ரிலே’ ஓட்டத்தில் பரத் ஸ்ரீதர், பிரியா மோகன், கபில், ரூபல் சவுத்தரி அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றது.