பிரிஸ்டேல்: அயர்லாந்துக்கு எதிரான முதல் ‘டி–20’ போட்டியில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பிரிஸ்டோலில் நடந்தது.
‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (7), வான் டெர் துசென் (10) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ரீசா ஹென்டிரிக்ஸ் (74), மார்க்ரம் (56) அரைசதம் கடந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (24), டுவைன் பிரிட்டோரிஸ் (21) ஆறுதல் தர தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன் குவித்தது.
கடின இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு ஸ்டிர்லிங் (18), கேப்டன் பால்பிர்னி (14) சுமாரான துவக்கம் தந்தனர். ஹாரி டெக்டர் (6), கரேத் டெலானி (2), கர்டிஸ் கேம்பர் (0), மார்க் அடைர் (2) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். லார்கன் டக்கர் (78), ஜார்ஜ் டாக்ரெல் (43) ஓரளவு கைகொடுத்தனர். அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் கேஷவ் மஹராஜ், பார்னல், ஷாம்சி தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ஹென்டிரிக்ஸ் வென்றார்.