பர்மிங்காம்: காமன்வெல்த் ஜூடோவில் இந்திய வீராங்கனை துலிகா, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
இங்கிலாந்தில் காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. பெண்களுக்கான ஜூடோ 78 கிலோ பிரிவில் இந்தியாவின் துலிமா மான் பங்கேற்றார். காலிறுதியில் மொரீசியசின் துர்ஹோனை சந்தித்தார். இதில் 10–0 என வெற்றி பெற்றார்.
அடுத்து நடந்த அரையிறுதியில் துலிகா, நியூசிலாந்தின் ஆன்ட்ரீவ்சுடன் மோதினார். 10–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். பைனலில் ஸ்காட்லாந்தின் சாராவை எதிர்கொண்டார். துவக்கத்தில் 1–0 என முன்னிலை பெற்ற துலிகா, கடைசி நேரத்தில் கிழே சரிந்து, 1–10 என தோல்வியடைந்தார்.
துலிகாவுக்கு வெள்ளிப் பதக்கம் மட்டும் கிடைத்தது. பர்மிங்காமில் ஜூடோ போட்டியில் இந்தியா வென்ற மூன்றாவது பதக்கமாக அமைந்தது. முன்னதாக சுஷிலா வெள்ளி, விஜய் குமார் வெண்கலம் வென்றிருந்தனர்.
லவ்பிரீத் வெண்கலம்
ஆண்களுக்கான பளுதுாக்குதலில் இந்தியாவின் லவ்பிரீத் சிங், முதன் முறையாக காமன்வெல்த்தில் பங்கேற்றார். 109 கிலோ பிரிவில் களமிறங்கிய இவர், ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 163 கிலோ துாக்கினார்.
அடுத்து ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 192 கிலோ துாக்கினார். இது புதிய தேசிய சாதனையாக அமைந்தது. மொத்தம் 355 கிலோ துாக்கிய லவ்பீரித் சிங், புதிய தேசிய சாதனை படைத்தார். தவிர மூன்றாவது இடம் பெற்று, வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார்.
* ஏமாற்றிய உஷா
பெண்களுக்கான பளுதுாக்குதல் 87 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் உஷா களமிறங்கினார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 95 கிலோ, ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 110 கிலோ என மொத்தம் 205 கிலோ துாக்கி, 6வது இடம் மட்டும் பிடித்து ஏமாற்றினார்.
* பெண்கள் +87 கிலோ பிரிவில் இந்தியாவின் பூர்ணிமா பாண்டே களமிறங்கினார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 103 கிலோ, ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 125 கிலோ என மொத்தம் 228 கிலோ மட்டும் துாக்கி, 6வது இடம் பிடித்தார்.