புவனேஸ்வர்: தெற்காசிய கால்பந்து (20 வயது) லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய அணி 1–2 என, வங்கதேசத்திடம் வீழ்ந்தது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், 20 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை என 5 அணிகள் பங்கேற்கின்றன.
இதன் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்திய அணி 1–2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் குர்கிரத் சிங் 35வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். வங்கதேச அணிக்கு முகமது பியாஷ் அகமது நோவா 2 கோல் (29, 45+1வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். இந்திய அணி, தனது 2வது லீக் போட்டியில் நாளை இலங்கையை எதிர்கொள்கிறது.