டப்ளின்: ‘‘வேறு வழியில்லாத நிலையில், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும் போர் வீரராக மாற வேண்டும்,’’ என தீபக் ஹூடா தெரிவித்தார்.
அயர்லாந்து சென்ற இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்றது. இரண்டாவது போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தீபக் ஹூடா சதம் (104 ரன்) கைகொடுக்க, இந்திய அணி 20 ஓவரில் 225/7 ரன் எடுத்தது.
பின் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 221/5 ரன் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி 2–0 என ‘டி–20’ தொடரை கைப்பற்றியது.
இதுகுறித்து தீபக் ஹூடா 27, கூறியது:
சர்வதேச அரங்கில் ‘டாப் ஆர்டர்’ வீரராக இருந்துள்ளேன். ஆனால் ஒருமுறை கூட துவக்க வீரராக களமிறங்கியது இல்லை. வேறு வழியில்லாத நிலையில் வருகின்ற வாய்ப்பை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அப்படி ஒரு சூழலில் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும் ‘போர்’ வீரராக ஏன் மாறக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.
இதற்கேற்ப அனைத்து விஷயங்களும் எனக்கு சாதகமாக அமைந்தன. கடைசியில் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சியாக இருந்தது.
பொதுவாக இந்திய அணியில் இடம் பெறுவது கடினம். அப்படியே கிடைத்தாலும், அதை தக்கவைப்பது அதைவிட சிரமம். ஒருவேளை இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், அந்த இடத்தில் நம்மை பற்றிய எண்ணம் இருக்கக் கூடாது. அணியின் நலனுக்காக மட்டுமே யோசிக்க வேண்டும்.
சூழ்நிலைக்கு தகுந்து அணியின் வெற்றிக்கு எப்படி உதவுவது என்ற எண்ணம் தான், மைதானத்தில் இருந்த போது எனக்குள் ஏற்பட்டது. இதை மீறி வேறெதுவும் யோசிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பாண்ட்யா பாராட்டு
உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் அயர்லாந்து வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. முதல் 3 பந்தில் 9 ரன், அடுத்த 2 பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டன. கடைசி பந்தில் 6 ரன் தேவை என்ற நிலையில், உம்ரான் துல்லியமாக வீச 1 ரன் மட்டுமே கிடைத்தது. இந்தியா 4 ரன்னில் வென்றது.
பரிசளிப்பு நிகழ்வில் கோப்பையை உம்ரானிடம் கொடுத்து மகிழ்ந்தார் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா. அவர் கூறுகையில்,‘‘ உம்ரானிடம் வேகமாக பந்து வீசுவார். இதை எதிர்கொள்வது கடினம் என்பதால் கடைசி ஓவரை அவரிடம் கொடுத்தேன். ஒட்டுமொத்தமாக இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர்,’’ என்றார்.