பர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் நாளை துவங்குகிறது. இதற்கான இந்திய அணி கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டார்.
இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2–1 என முன்னிலையில் இருந்தது. கொரோனா காரணமாக மான்செஸ்டரில் நடக்க இருந்த 5வது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது. இப்போட்டி, நாளை பர்மிங்காமில் துவங்குகிறது.
இதற்கான இந்திய அணி கேப்டனாக பும்ரா 28, கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த 1987ல் வேகப்பந்து வீச்சாளர் கபில் தேவ் இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது 35 ஆண்டுக்குப் பின் இந்திய அணி கேப்டனாக வேகப்பந்து வீச்சளார் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பாகிஸ்தானின் இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், விண்டீசின் வால்ஷ், ‘நம்பர்–1’ ஆஸ்திரேலியா அணியின் கம்மின்ஸ் வரிசையில் டெஸ்ட் அணி கேப்டனாக கலக்க காத்திருக்கிறார் பும்ரா.
இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் ஒருவர் கூறுகையில்,‘ துணைக் கேப்டன் ராகுல் இல்லாத நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுவார்,’ என்றார்.
ரோகித் விலகல்
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா. கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட இவரிடம் இரண்டாவது கட்ட சோதனை நடந்தது. இதில் பாதிப்பு உறுதியாக பர்மிங்காம் டெஸ்டில் இருந்து விலகினார்.
36
இந்திய அணி கடந்த 1932 முதல் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. முதல் கேப்டனாக சி.கே.நாயுடு இருந்தார். தற்போது 36வது கேப்டனாக பும்ரா செயல்பட உள்ளார். இவர் 29 டெஸ்டில் 123 விக்கெட் சாய்த்துள்ளார்.
துவக்கம் யாரு
ரோகித் விலகலை அடுத்து நாளை துவங்கும் டெஸ்டில் புஜாரா, சுப்மன் கில் ஜோடி துவக்கம் தரவுள்ளது. அடுத்து கோஹ்லி, ஸ்ரேயாஸ், ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட் என பேட்டிங் வரிசை நீளும். மயங்க் அகர்வால் இருந்தாலும், களமிறங்கும் ‘லெவன்’ அணியில் இடம் கிடைக்காது.