லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு ஸ்வியாடெக், ரடுகானு முன்னேறினர்.
இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக், குரோஷியாவின் ஜனா பெட்டை எதிர்கொண்டார். முதல் செட்டை 6–0 என வென்ற ஸ்வியாடெக், அடுத்த செட்டையும் 6–3 என கைப்பற்றினார். முடிவில் ஸ்வியாடெக் 6–0, 6–3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
ஸ்பெயினின் பவுலா படோசா, அமெரிக்காவின் சிரிகோவை 6–2, 6–1 என வீழ்த்தினார். மற்றொரு முதல் சுற்று போட்டியில் லாட்வியாவின் ஆஸ்டபென்கோ, பிரான்சின் டோடின் மோதினர். இதில் ஆஸ்டபென்கோ 6–4, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பிரிட்டனின் எம்மா ரடுகானு, பெல்ஜியத்தின் அலிசன் வானை சந்தித்தார். இதில் ரடுகானு 6–4, 6–4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். கிரீசின் மரியா சக்காரி, 6–1, 6–4 என ஆஸ்திரேலியாடின் ஹிவ்சை வீழ்த்தினார். முன்னணி வீராங்கனை பெலிண்டா பென்சிக், முதல் சுற்றில் 4–6, 7–5, 2–6 என சீனாவின் வாங்கிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் கெர்பர் (ஜெர்மனி), சர்ஸ்டீயா (ருமேனியா), அலைஸ் கார்னெட் (பிரான்ஸ்), கோலோபிக் (சுவிட்சர்லாந்து) வெற்றி பெற்றனர்.
வாவ்ரின்கா ‘ஷாக்’
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, இத்தாலியின் ஜான் சின்னரை சந்தித்தார். இதில் வான்ரின்கா 5–7, 6–4, 3–6, 2–6 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்தார். பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 4–6, 6–3, 6–3, 6–4 என ஆஸ்திரேலியாவின் டக்வொர்த்தை வென்றார்.