லண்டன்: இங்கிலாந்துக்கு முதல் உலக கோப்பை வென்று தந்த கேப்டன் இயான் மார்கன் ஒய்வு பெற்றார்.
இங்கிலாந்து ஒருநாள், ‘டி–20’ அணி கேப்டன் இயான் மார்கன் 35. அயர்லாந்தின் டப்ளினில் பிறந்தவர். 2006ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக அறிமுகம் ஆனார். 16 டெஸ்ட் (700 ரன்), 248 ஒருநாள் (7701), 115 ‘டி–20’ (2458) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2014ல் இங்கிலாந்து அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை அறிமுகம் செய்து அணியை உச்சிக்கு கொண்டு சென்றார். 2019ல் சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலக கோப்பை தொடரில் சாதித்து, இங்கிலாந்து அணிக்கு முதல் உலக கோப்பை வென்று தந்தார். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி ‘டி–20’ தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது.
கடந்த 2021, ஜன. முதல் இவரது பேட்டிங்கில் சரிவு ஏற்பட்டது. 5 ஒருநாள் போட்டியில் 103 ரன் மட்டும் எடுத்த இவர், 43 ‘டி–20’ போட்டியில் 643 ரன் தான் எடுத்தார்.
இதையடுத்து சர்வதேச அரங்கில் இருந்து மார்கன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க உள்ளார்.
மார்கன் வெளியிட்ட செய்தி:
சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுவது எளிதான முடிவல்ல. ஆனால் இதற்கான சரியான தருணம் இது தான் என நினைக்கிறேன். மற்றபடி ஒரு வீரராக, கேப்டனாக இங்கிலாந்து அணிக்கு சாதித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். அதேநேரம் சக வீரர்களுடன் இணைந்து விளையாடிய நினைவுகள் என்றும் மனதில் நீடித்து நிற்கும்.
தவிர இரண்டு உலக கோப்பை வென்ற (2010ல் ‘டி–20’, 2019ல் ஒருநாள்) இங்கிலாந்து அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இங்கிலாந்து அணியின் எதிர்காலம் எப்போதும் இல்லாத வகையில் பிரகாசமாக உள்ளது. அதிக அனுபவம் கொண்ட திறமையான வீரர்கள், கடைசி வரை நீடிக்கும் பேட்டிங் என வலுவான அணியாக உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
17
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக (2019) 71 பந்தில் 148 ரன் குவித்த மார்கன், ஒருநாள் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். இதில் 17 சிக்சர் அடித்தார். சர்வதேச அரங்கில் எந்த ஒரு கிரிக்கெட்டிலும் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என உலக சாதனை படைத்தார்.
72
சர்வதேச ‘டி–20’ அரங்கில் 72 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து உலக சாதனை படைத்தார். இதை இந்தியாவின் தோனியுடன் (72 போட்டி கேப்டன்) பகிர்ந்து கொண்டார்.
248
ஒருநாள் அரங்கில் தனது முதல் 23 போட்டிகளை அயர்லாந்து அணிக்காக விளையாடினார். அடுத்து இங்கிலாந்துக்காக 225 என மொத்தம் 248 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார் மார்கன்.
பட்லர் கேப்டன்
மார்கன் ஓய்வு பெற்றதை அடுத்து இங்கிலாந்து ஒருநாள், ‘டி–20’ அணி கேப்டனா பட்லர் நியமிக்கப்பட உள்ளார். வரும் உலக கோப்பை தொடரில் இவர் கேப்டனாக செயல்பட காத்திருக்கிறார்.