அல்மாட்டி: சர்வதேச தடகளத்தில் 15 தங்கம் உட்பட 28 பதக்கங்கள் வென்றனர் இந்திய நட்சத்திரங்கள். தமிழகத்தின் தனலட்சுமி 200 மீ., ஓட்டத்தில் சாதனை படைத்து தங்கம் வென்றார்.
கஜகஸ்தானில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. இதன் இரண்டாவது நாள் போட்டியில் 200 மீ., ஓட்டத்தில் பங்கேற்றார் இந்தியாவின் தனலட்சுமி 24. இவர் 22.89 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். இது இவரது சிறந்த முடிவாக அமைந்தது. ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற கஜகஸ்தானின் சப்ரனோவா (23.21 வினாடி) வெள்ளி வென்றார். இந்தியாவின் டுட்டீ சந்த் (23.60 வினாடி) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். தவிர, டுட்டீ சந்த் 100 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்றார்.
மூன்றாவது வீராங்கனை
200 மீ., ஓட்டத்தில் 23 வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஓடிய மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார் தனலட்சுமி. இதற்கு முன் 2002ல் சரஸ்வதி (22.82 வினாடி), 2021ல் டுட்டீ சந்த் (22.88 வினாடி) இந்த சாதனை படைத்தனர். தவிர 0.09 வினாடி குறைவான நேரத்தில் ஓடிய தனலட்சுமி, உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார்.
400 மீ., தடை ஓட்டத்தில் இந்தியாவின் வித்யா (தமிழகம்) முதலிடம் பிடித்து அசத்தினார்.
அன்னு தங்கம்
பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி, 62.29 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஷில்பா (56.16 மீ.,), சஞ்சனா (55.12) வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் ஆன்சி, 4, 5வது வாய்ப்பில் அதிகபட்சம் 6.44 மீ., துாரம் தாண்டி, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.
சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சரிதா, 3வது வாய்ப்பில் அதிகபட்சம் 62.48 மீ., துாரம் எறிந்து தங்கம் வென்றார். இருப்பினும் சென்னையில் இவர் 64.16 மீ., துாரம் எறிந்து இருந்தார். வட்டு எறிதலில் இந்தியாவின் நவ்ஜீத் தில்லான், 56.24 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் பெற்றார்.
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கரன்வீர் சிங் (19.47 மீ.,), 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் கிருஷ்ணன் குமார் (1:49.80 நிமிடம்) தங்கம் வென்றனர். ஆண்கள் 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் தட்டிச்சென்றது.
28 பதக்கம்
ஒட்டுமொத்தமாக இரண்டு நாள் போட்டி முடிவில் இந்திய அணி 15 தங்கம் உட்பட 28 பதக்கங்கள் வென்றது.