திருநெல்வேலி: திருச்சி அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருப்பூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல்., தொடரின் ஆறாவது சீசன் தமிழகத்தில் நடக்கிறது. திருநெல்வேலியில் நேற்று நடந்த லீக் போட்டியில் திருச்சி, திருப்பூர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திருப்பூர் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
திருச்சி அணிக்கு ‘சீனியர்’ முரளி விஜய், அமித் சாத்விக் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. அஸ்வின் கிறிஸ்ட் வீசிய இரண்டாவது ஓவரில் முரளி விஜய் ரன்வேகம் காட்டினார். கடைசி 4 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சர் என தொடர்ந்து விளாசி அசத்த, இந்த ஓவரில் 20 ரன் கிடைத்தன. அடுத்து 5வது ஓவரை வீசினார் பாவ்னா. முதல் இரண்டு பந்தில் முரளி விஜய், பவுண்டரி அடித்தார். கடைசி 3 பந்தில் 4, 4, 6 என சாத்விக் அடித்து நொறுக்க, 23 ரன் கிடைத்தன. திருச்சி அணி 5 ஓவரில் 53/0 ரன் சேர்த்தது.
திடீர் சரிவு
முகமது வீசிய போட்டியின் 6வது ஓவரில் திருப்பம் ஏற்பட்டது. இதன் 3 வது பந்தில் முரளி விஜய் (34 ரன், 16 பந்து) ‘கேட்ச்’ கொடுத்தார். அடுத்த ஓவரில் சாத்விக்கை (26 ரன், 21 பந்து) வெளியேற்றினார் அஸ்வின். ராஜகோபால் (2), அத்னன் கான் (13), ஆதித்யா (15), அந்தோணி (13) நீடிக்கவில்லை. திருச்சி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது. மதிவாணன் (27), சரவணக்குமார் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
அடுத்து களமிறங்கிய திருப்பூர் அணியை சித்தார்த் (7), கேப்டன் அனிருதா (9) கைவிட்டனர். ஒரு கட்டத்தில் 10.1 ஓவரில் 78/2 ரன் என நல்ல நிலையில் இருந்தது திருப்பூர். அடுத்து சுப்ரமணியன் (35), பாவ்னா (26) சுரேஷ் குமார் (2), ராஜ்குமார் (1) என வரிசையாக கிளம்ப, 98/6 என திணறியது.
பின் இணைந்த ரஹேஜா, முகமது ஜோடி நெருப்பாக ஆடியது. 28 பந்தில் இந்த ஜோடி 60 ரன் சேர்க்க, வெற்றி எளிதானது. திருப்பூர் அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ரஹேஜா (42), முகமது (29) அவுட்டாகாமல் இருந்தனர்.