பாரிஸ்: உலக வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்டு பிரிவு பைனலுக்கு இந்தியா முன்னேறியது. தீபிகா குமாரி முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக கோப்பை வில்வித்தை சாம்பியன்ஷிப், ‘ஸ்டேஜ் 3’ போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா சார்பில் அபிஷேக், ஜோதி ஜோடி களமிறங்கியது.
இதன் இரண்டாவது சுற்றில் போர்டோரிகோவை வென்ற இந்தியா, காலிறுதியில் எல் சால்வடாரை சந்தித்தது. இப்போட்டி 155–155 என சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய ‘ஷூட் ஆப்’ முறைக்கு சென்றது.
இதில் இரு அணியும் 19–19 என சமனில் இருந்தன. ஆனால், மைய புள்ளிக்கு அருகில் வில் எய்ததன் அடிப்படையில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அடுத்து நடந்த அரையிறுதியில் 156–151 என எஸ்தோனியாவை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது இந்தியா. இதில் இந்திய அணி, இன்று பிரான்சை எதிர்கொள்கிறது.
தீபிகா ஏமாற்றம்
நீண்ட இடைவெளிக்குப் பின் ‘ரீகர்வ்’ பிரிவில் களமிறங்கினார் இந்தியாவின் தீபிகா குமாரி. முதல் சுற்றில் இவர் 2–6 என தோற்று வெளியேறினார். மற்ற இந்திய வீராங்கனைகள் அன்கிதா, ரிதி முதல் சுற்றில் வீழ்ந்தனர்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், 6–2 என பிரான்சின் லோபசை வென்றார். பிறகு நடந்த காலிறுதியில் சிம்ரன்ஜீத், 0–6 என தென் கொரியாவின் லெய் சியனிடம் தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் ‘ரீகர்வ்’ பிரிவில் இந்தியாவின் தருண்தீப் ராய், பிரவின் ரமேஷ், ஜெயந்தா தாலுக்தர் வெற்றி பெற்றனர். காலிறுதியில் ஜெயந்தா, ‘ஷூட் ஆப்’ முறையில் தென் கொரியாவின் கிம் ஊஜினிடம் வீழ்ந்தார்.