டப்ளின்: ஜூனியர் ஹாக்கி தொடரின் பைனலுக்கு இந்தியா முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் இந்தியா, 4–1 என அமெரிக்காவை வீழ்த்தியது.
அயர்லாந்து சென்ற இந்திய பெண்கள் ‘ஜூனியர்’ ஹாக்கி அணி, ஐந்து நாடுகள் மோதும் தொடரில் பங்கேற்கிறது. இதில் அயர்லாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து, உக்ரைன் அணிகள் மோதுகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. இந்திய அணி முதல் மூன்று போட்டியில் 2 வெற்றி, 1 ‘டிரா’ செய்தது. நான்காவது, கடைசி போட்டியில் இந்திய அணி, அமெரிக்காவை சந்தித்தது.
முதல் பாதியில் ஸ்கோர் 0–0 என இருந்தது. தொடர்ந்து முதல் 45 நிமிடங்களில் எந்த அணி தரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை. 46வது நிமிடம் அமெரிக்காவின் ஹன்னா ஒரு கோல் அடித்தார். இதன் பின் இந்திய வீராங்கனைகள் எழுச்சி பெற்றனர். 48வது நிமிடம் நிகிதா ஒரு கோல் அடிக்க ஸ்கோர் 1–1 என ஆனது.
அடுத்த சில நிமிடங்களில் அசத்தலாக செயல்பட்ட இந்தியாவின் அன்னு, 49, 52வது நிமிடங்களில் கோல் அடிக்க, 3–1 என முன்னிலை பெற்றது. போட்டியின் 58 வது நிமிடத்தில் இந்தியாவின் வைஷ்ணவி மற்றொரு கோல் அடித்தார்.
முடிவில் இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 4 போட்டியில் 3 வெற்றி, 1 ‘டிரா’ செய்த இந்திய அணி, பட்டியலில் முதலிடம் பெற்று நாளை நடக்கவுள்ள பைனலுக்கு முன்னேறியது.