பிஷ்கெக்: ஆசிய மல்யுத்தம் ‘பிரீஸ்டைல்’ (17 வயது) பிரிவில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
கிர்கிஸ்தானில், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் (17 வயது, 23 வயது) தொடர் நடக்கிறது. நேற்று நடந்த 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான ‘பிரீஸ்டைல்’ பிரிவு போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் கிடைத்தன. இந்தியா சார்பில் நிங்கப்பா (45 கிலோ), சுபம் (48 கிலோ), வைபவ் பாட்டீல் (55 கிலோ) தலா ஒரு தங்கம் வென்றனர். பிரதிக் தேஷ்முக் (110 கிலோ) வெள்ளி வென்றார். நார்சிங் பாட்டீல் (51 கிலோ), சவுரப் (60 கிலோ) தலா ஒரு வெண்கலம் கைப்பற்றினர்.
‘பிரீஸ்டைல்’ பிரிவில் இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என, 8 பதக்கங்கள் கிடைத்தன. இதன்மூலம் 188 புள்ளி பெற்ற இந்தியா, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அடுத்த இரு இடங்களை கஜகஸ்தான் (150 புள்ளி), உஸ்பெகிஸ்தான் (145) பிடித்தன.