குருகிராம்: ஐ.டி.எப்., தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் ராஷ்மிகா முன்னேறினார். முன்னணி வீராங்கனை அன்கிதா ரெய்னா முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.
இந்தியாவின் ஹரியானாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, சக வீராங்கனை குந்தலியை சந்தித்தார். இதில் ராஷ்மிகா 6–2, 6–1 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை அன்கிதா ரெய்னா, வைதேகி பலப்பரீட்சை நடத்தினர். இதில் வைதேகி 7–6, 6–3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார். இந்தியாவின் சவ்ஜன்யா, ரஷ்யாவின் எலினாவை 2–6, 7–6, 6–3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனை ஜீல் தேசாய், தாய்லாந்தின் புனினை எதிர்கொண்டார். இதில் 6–4, 3–6, 6–7 என்ற செட் கணக்கில் ஜீல் தேசாய் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.