லீசெஸ்டர்: இந்தியா, லீசெஸ்டர்ஷயர் அணிகள் மோதும் நான்கு நாள் பயிற்சி போட்டி இன்று துவங்குகிறது.
இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி கடந்த ஆண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நான்கு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2–1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது, கடைசி டெஸ்ட் மான்செஸ்டரில் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இப்போட்டி, வரும் ஜூலை 1–5ல் பர்மிங்காமில் நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணி, லீசெஸ்டர்ஷயர் கவுன்டி அணிக்கு எதிராக நான்கு நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது.
கடந்த 2007ல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது. தற்போது பயிற்சியாளராக சென்றுள்ள டிராவிட், மீண்டும் இந்தியாவுக்கு டெஸ்ட் கோப்பை வென்று தர திட்டமிட்டுள்ளார். இதனால் இன்று துவங்கும் பயிற்சி போட்டி எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் கடந்த மார்ச் மாதத்துக்குப்பின் இந்திய அணி எவ்வித டெஸ்டிலும் பங்கேற்கவில்லை. எனினும் அன்னிய மண்ணில் முதன் முறையாக இணைந்து துவக்கம் தரவுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி நம்பிக்கை தரலாம்.
சமீபத்தில் கவுன்டி போட்டிகளில் ‘மிடில் ஆர்டரில்’ 8 இன்னிங்சில் 720 ரன் குவித்த புஜாரா, மீண்டும் மிரட்டலாம். இவருடன் கோஹ்லி, ஹனுமா விஹாரி, இளம் வீரர் ரிஷாப் பன்ட் கைகொடுக்கலாம்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் சமீபத்திய ஓய்வில் இருந்து திரும்பிய பும்ரா, முகமது ஷமி, ‘ஆல் ரவுண்டர்’ ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், சுழற்பந்து வீச்சில் ஜடேஜா திறமை வெளிப்படுத்த முயற்சிக்கலாம்.
இங்கிலாந்து செல்கிறார் அஷ்வின்
ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றவர் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். இங்கிலாந்து செல்லும் முன் நடத்தப்பட்ட சோதனையில், இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இங்கிலாந்து செல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டார். தற்போது கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட அஷ்வின், விரைவில் இங்கிலாந்து சென்று இந்திய டெஸ்ட் அணியில் இணைய உள்ளார்.
கோஹ்லிக்கு சிக்கலா
ஐ.பி.எல்., தொடருக்குப் பின் இந்திய வீரர் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட்டது. இவர் மாலத்தீவு சென்று திரும்பினார். இதன் பின் கோஹ்லிக்கு கொரோனா ஏற்பட்டதாக செய்தி வெளியாகின. இதில் இருந்து அவர் முழுமையாக மீண்டு விட்டார். மேலும் சில வீரர்களுக்கு பாதிப்பு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட வீரர்களுக்கு அதிக சுமை தர வேண்டாம் என மருத்துவக்குழு ‘அட்வைஸ்’ செய்துள்ளது. இதனால் இன்று கோஹ்லி பங்கேற்பாரா, அல்லது பயிற்சி போட்டி திட்டமிட்டபடி துவங்குமா என சந்தேகமாக உள்ளது.