ரோட்டர்டாம்: புரோ ஹாக்கியில் இந்தியாவின் வெண்கலம் உறுதியானது. லீக் போட்டியில் 4–0 என, அமெரிக்காவை மீண்டும் வீழ்த்தியது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் ஹாக்கி 3வது சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன. அர்ஜென்டினா அணி (13 வெற்றி, 3 ‘டிரா’) 42 புள்ளிகளுடன் ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.
நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 4–2 என அமெரிக்காவை வீழ்த்தியது. இவ்விரு அணிகள் மீண்டும் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு வந்தனா (38, 53வது நிமிடம்), சோனிகா (53வது), சங்கீதா குமாரி (56வது) கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய அமெரிக்க வீராங்கனைகளால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி, 14 போட்டியில், 6 வெற்றி, 4 ‘டிரா’, 4 தோல்வி என 30 புள்ளிகளுடன் 3வது இடத்தை உறுதி செய்தது.