ஆம்ஸ்டெல்வீன்: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய் சதம் கடந்து கைகொடுக்க இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 3–0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. சொந்த மண்ணில் நெதர்லாந்து ஏமாற்றியது.
நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. நெதர்லாந்து அணிக்கு மேக்ஸ் ஓ'டவுட் (50), பாஸ் டி லீடே (56), கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (64) கைகொடுக்க, 49.2 ஓவரில் 244 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லி 4 விக்கெட் கைப்பற்றினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (49) நம்பிக்கை தந்தார். டேவிட் மலான் (0) ஏமாற்றினார். அபாரமாக ஆடிய ஜேசன் ராய் சதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய ஜாஸ் பட்லர் அரைசதம் விளாசினார். பிரிங்கிள் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பட்லர், வெற்றியை உறுதி செய்தார்.
இங்கிலாந்து அணி 30.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 248 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராய் (101), பட்லர் (86) அவுட்டாகாமல் இருந்தனர்.