புதுடில்லி: ஆசிய சைக்கிள் பந்தயத்தின் ‘ஸ்பிரின்ட்’ பிரிவில் இந்தியாவின் ரொனால்டோ சிங், வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டில்லியில் 41வது சீனியர், 28வது ஜூனியர் ஆசிய டிராக் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 10வது பாரா சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்களுக்கான ‘ஸ்பிரின்ட்’ தனிநபர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரொனால்டோ சிங், கஜகஸ்தானின் ஆன்ட்ரி சுகே மோதினர். இதில் ரொனால்டோ (10.422, 10.899 வினாடி) வெற்றி பெற்றார். அடுத்து நடந்த பைனலில் ரொனால்டோ, ஜப்பானின் கென்டோ யமாசகியை சந்தித்தார். இதில் ஏமாற்றிய ரொனால்டோ (10.454, 10.433 வினாடி) தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, இம்முறை இவர் வென்ற 3வது பதக்கம். ஏற்கனவே ஒரு கி.மீ., ‘டைம் டிரையல்’, அணிகளுக்கான ‘ஸ்பிரின்ட்’ பிரிவு போட்டிகளில் தலா ஒரு வெண்கலம் வென்றிருந்தார்.
ஜூனியர் ஆண்களுக்கான 15 கி.மீ., ‘பாய்ண்ட் ரேஸ்’ பிரிவில் 23 புள்ளிகளுடன் இந்தியாவின் பிர்ஜித் வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 10 கி.மீ., ‘ஸ்கிராட்ச் ரேஸ்’ பைனலில் இந்தியாவின் சயானிகா 19, வெண்கலம் கைப்பற்றினார்.
இத்தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 15 வெண்கலம் என, 23 பதக்கங்கள் வென்ற இந்தியாவுக்கு பதக்கப்பட்டியலில் 5வது இடம் கிடைத்தது. முதல் மூன்று இடங்களை முறையே ஜப்பான் (18 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம்), தென் கொரியா (12 தங்கம், 14 வெள்ளி, 3 வெண்கலம்), கஜகஸ்தான் (4 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) கைப்பற்றின.