லீட்ஸ்: லீட்ஸ் டெஸ்டில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக இங்கிலாந்தின் ஆண்டர்சன் விலகினார். ஜேமி ஓவர்டன் அறிமுகமாகிறார்.
இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற இங்கிலாந்து 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. இன்று, லீட்சில் மூன்றாவது டெஸ்ட் துவங்குகிறது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், கணுக்கால் காயம் காரணமாக விலகினார். இவருக்கு பதிலாக ‘லெவன்’ அணியில் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டன் 28, அறிமுகமாகிறார். இவர், இதுவரை 82 முதல் தர போட்டியில் 206 விக்கெட் சாய்த்துள்ளார்.
இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஜேமி ஓவர்டனின் சகோதரர் கிரெய்க் ஓவர்டனுக்கு ‘லெவன்’ அணியில் இடம் கிடைக்கவில்லை. ஒருவேளை இவர்கள் இருவருக்கும் இடம் கிடைத்திருந்தால், இங்கிலாந்து ‘லெவன்’ அணியில் இடம் பிடித்த முதல் இரட்டை சகோதரர்கள் என்று பெருமை பெற்றிருக்கலாம்.
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலே, போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் போக்ஸ், மாத்யூ பாட்ஸ், ஜேமி ஓவர்டன், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச்.