திருநெல்வேலி: டி.என்.பி.எல்., கிரிக்கெட் தொடரின் ஆறாவது சீசன் இன்று திருநெல்வேலியில் துவங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக்கம், நெல்லை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., தொடர் நடத்தப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், கோவை, திருச்சி, நெல்லை, சேப்பாக்கம், சேலம், திருப்பூர் என 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் ஆறாவது சீசன் இன்று திருநெல்வேலியில் உள்ள ஐ.சி.எல்., சங்கர் நகர் மைதானத்தில் துவங்குகிறது. 28 நாளில் 28 லீக் போட்டி, 4 ‘பிளே ஆப்’ உட்பட, 32 போட்டிகள் நடக்கவுள்ளன.
சேப்பாக்கம் ஆதிக்கம்
தொடரின் வெற்றிகரமான அணியாக சேப்பாக்கம் உள்ளது. இதுவரை நடந்த 5 சீசனில் 3 முறை (2017, 2019, 2021) கோப்பை வென்றது. இம்முறை சாதிக்கும் பட்சத்தில் ‘ஹாட்ரிக்’ கோப்பை வென்று சாதிக்கலாம். இத்தொடரில் அதிக ரன் எடுத்த விக்கெட் கீப்பர்/பேட்டர் ஜெகதீசன் (1240 ரன்), அதிக விக்கெட்டுகள் சாய்த்த பவுலர்களில் முதலிடத்தில் உள்ள ‘சுழல்’ சாய் கிஷோர் (68) இந்த அணியில் உள்ளனர். தவிர மணிமாறன் சித்தார்த், ‘வேகத்தில்’ சந்தீப் வாரியர் என முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளது சேப்பாக்கம் அணிக்கு கூடுதல் பலம்.
துாத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, மதுரை அணிகள் தலா ஒருமுறை கோப்பை வென்றன. மதுரை அணிக்கு இம்முறை சதுர்வேத் கேப்டனாக களமிறங்குகிறார். சுழற்பந்துவீச்சில் கலக்கும் வருண் சக்ரவர்த்தி, கவுஷிக், சிலம்பரசன் ஜொலிக்கும் பட்சத்தில் இரண்டாவது கோப்பை வெல்லலாம்.
ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் அணியை பொறுத்தவரையில் இதுவரை கோப்பை வென்றதில்லை. 2018, 2019 என இரு முறை பைனலுக்கு முன்னேறியது தான் அதிகபட்சம்.
விஜய் வருகை
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த முரளி விஜய் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார். இவர் ராகில் ஷா தலைமையிலான திருச்சி அணிக்காக விளையாடுகிறார். தவிர சேலம் அணியில் விஜய் சங்கர், முருகன் அஷ்வின் உள்ளனர்.
நெல்லை அணி கேப்டனாக பாபா அபராஜித் களமிறங்குகிறார். ஐ.பி.எல்., தொடரில் அசத்திய ஷாருக்கான், கோவை அணி கேப்டனாக அசத்த காத்திருக்கிறார். தவிர ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வென்ற குஜராத் அணிக்காக விளையாடிய சாய் சுதர்சனும் அணியில் உள்ளார்.
இன்று நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக்கம், நெல்லை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
‘பிளே ஆப்’ அறிமுகம்
டி.என்.பி.எல்., தொடரில் முதன் முறையாக ஐ.பி.எல்., போல ‘பிளே ஆப்’ சுற்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் படி தகுதிச்சுற்று 1, ‘எலிமினேட்டர்’, தகுதிச்சுற்று 2 போட்டிகள் நடக்கும். ஜூலை 31ல் கோவையில் நடக்கும் பைனலில் தகுதிச்சுற்று 1, 2ல் வெற்றி பெற்ற அணிகள் மோதும்.
ரசிகர்களுக்கு அனுமதி
டி.என்.பி.எல்., தொடர் தமிழகத்தின் திருநெல்வேலி, திண்டுக்கல், கோவை, சேலம் என நான்கு இடங்களில் நடக்கின்றன. இப்போட்டிகளை காண 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
ரூ. 1 கோடி
கோப்பை வெல்லும் அணி ரூ. 1 கோடி பரிசு, சாம்பியன் கோப்பை தரப்படும். பைனலில் தோற்கும் அணி ரூ. 60 லட்சம் பெறும். மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ. 40 லட்சம் கிடைக்கும். மற்ற அணிகள் தலா ரூ. 25 லட்சம் பெறும்.