தம்புலா: இலங்கைக்கு எதிரான ‘டி–20’ தொடரில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அதிக ரன் குவித்த இந்திய வீராங்கனை என்ற சாதனை படைக்கலாம்.
இலங்கை சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று ‘டி–20’, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இது, சமீபத்தில் முடிந்த ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) தொடருக்கு பின், இந்திய பெண்கள் அணி பங்கேற்கும் முதல் சர்வதேச தொடராகும். முதல் ‘டி–20’ போட்டி தம்புலாவில் இன்று நடக்கிறது.
சாதனை வாய்ப்பு: இத்தொடரில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச ‘டி–20’ போட்டியில் இதுவரை 121 போட்டியில் விளையாடி உள்ள ஹர்மன்பிரீத், ஒரு சதம், 6 அரைசதம் உட்பட 2319 ரன் எடுத்துள்ளார். இவர், மேலும் 46 ரன் எடுக்கும் பட்சத்தில், சர்வதேச ‘டி–20’ போட்டியில் அதிக ரன் குவித்த இந்திய வீராங்கனைகள் வரிசையில் மிதாலி ராஜை முந்தி முதலிடம் பிடிக்கலாம். மிதாலி, இதுவரை 89 போட்டியில், 17 அரைசதம் உட்பட 2364 ரன் எடுத்துள்ளார். அதிக ரன் குவித்த சர்வதேச வீராங்கனைகள் பட்டியலில் நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் (3380 ரன்) முதலிடத்தில் உள்ளார்.