ஈஸ்ட்போர்ன்: டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி தோல்வியடைந்தது.
இங்கிலாந்தில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் லுாசி ஹிரடெக்கா ஜோடி, ஜப்பானின் ஷுகோ அயோமா, தைவானின் ஹாவோ சிங் சன் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை நீண்ட இழுபறிக்குப் பின் சானியா ஜோடி 5–7 என கோட்டை விட்டது. பின் சுதாரித்துக் கொண்ட சானியா ஜோடி ‘டை பிரேக்கர்’ வரை சென்ற அடுத்த செட்டை 7–6 என வசப்படுத்தியது.
வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த ‘சூப்பர் டை பிரேக்கரை’ சானியா ஜோடி 7–10 என கோட்டை விட்டது. ஒரு மணி நேரம், 55 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சானியா ஜோடி 5–7, 7–6, 7–10 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தது.