ரோட்டர்டாம்: அர்ஜென்டினா அணிக்கு எதிரான புரோ ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் ஹாக்கி தொடரின் மூன்றாவது சீசன் நடத்தப்படுகிறது. இந்தியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டி முடிவில் அர்ஜென்டினா அணி (14 போட்டி, 12 வெற்றி, 2 ‘டிரா’) 38 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.
இந்திய அணி, இதுவரை விளையாடிய 10 போட்டியில் 4 வெற்றி, 3 ‘டிரா’, 3 தோல்வியுடன் என, 22 புள்ளி பெற்று பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நேற்று நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவை சந்தித்தது.
போட்டியின் 3வது நிமிடத்தில் இந்தியாவின் லால்ரெம்சியாமி ‘பீல்டு’ கோல் அடித்து அசத்தினார். 21 நிமிடம் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் அர்ஜென்டினாவின் அகஸ்டினா ஒரு கோல் அடித்தார். 36வது நிமிடம் ‘பெனால்டி ஸ்டிரோக்’ கிடைக்க, இதையும் கோலாக மாற்றினார் அகஸ்டினா.
இதே நிமிடம் இந்தியாவுக்கு ‘பெனால்டி கார்னர்’ கிடைத்தது. இதை ‘சீனியர்’ வீராங்கனை குர்ஜித் கவுர் கோலாக மாற்ற ஸ்கோர் 2–2 என்ற கணக்கில் சமன் ஆனது. தொடர்ந்து 44வது நிமிடம் அசத்திய அர்ஜென்டினாவின் அகஸ்டினா, ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். 50வது நிமிடம் இதற்கு பதிலடி தந்தது இந்தியா.
குர்ஜித் கவுர் தனது இரண்டாவது கோல் அடித்தார். ஸ்கோர் மீண்டும் (3–3) சமன் ஆனது. முடிவில் போட்டி 3–3 என்ற கணக்கில் போட்டி ‘டிரா’ ஆனது.
அடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு போட்டி சென்றது. இதில் இந்தியாவின் சோனிகா, நேகா கோல் அடித்தனர். அர்ஜென்டினா தரப்பில் விக்டோரியா மட்டும் கோல் அடித்தார். முடிவில் இந்திய பெண்கள் அணி 2–1 என்ற கோல் கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
நான்காவது தோல்வி
ஆண்களுக்கான புரோ ஹாக்கி லீக் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்திடம் 1–2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதுவரை 15 போட்டியில் 8 வெற்றி, 3 ‘டிரா செய்த இந்திய அணி நான்காவது தோல்வியை பதிவு செய்தது. 29 புள்ளியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.