பெங்களூரு: ரஞ்சி கோப்பை பைனலுக்கு மும்பை அணி 47வது முறையாக முன்னேறியது. பெங்களூருவில், ஜூன் 22ல் துவங்கவுள்ள பைனலில் மத்திய பிரதேச அணியை எதிர்கொள்கிறது.
பெங்களூருவில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் மும்பை, உத்தர பிரதேசம் (உ.பி.,) அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 393, உ.பி., 180 ரன் எடுத்தன. நான்காம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் மும்பை அணி 449/4 ரன் எடுத்திருந்தது. சர்பராஸ் (23), முலானி (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
மைதான ஈரப்பதம் காரணமாக 5ம் நாள் ஆட்டம் உணவு இடைவேளைக்கு பின் துவங்கியது. மும்பை அணியின் சர்பராஸ் கான் (59*), ஷாம்ஸ் முலானி (51*) அரைசதம் கடந்தனர். இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 533 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரு அணி கேப்டன்களும் கடைசி நாள் ஆட்டத்தை முன்னதாக முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவிக்கப்பட்டது.
முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் மும்பை அணி, 47வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது. முன்னதாக விளையாடிய 46 பைனலில், 41 முறை கோப்பை வென்றது மும்பை அணி, 5 முறை இரண்டாவது இடம் பிடித்தது.
பெங்கால் தோல்வி: ஆலுாரில் நடந்த மற்றொரு அரையிறுதியில் பெங்கால், மத்திய பிரதேசம் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மத்திய பிரதேசம் 341, பெங்கால் 273 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் மத்திய பிரதேசம் அணி 281 ரன் எடுத்தது. பின், 350 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய பெங்கால் அணி, 175 ரன்னுக்கு சுருண்டது.
முடிவில், 174 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மத்திய பிரதேச அணி, 23 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி கோப்பை பைனலுக்கு முன்னேறியது. கடைசியாக 1998–99 சீசனில் பைனல் வரை சென்றிருந்தது.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வரும் ஜூன் 22–26ல் நடக்கவுள்ள பைனலில் மத்திய பிரதேசம், மும்பை அணிகள் விளையாடுகின்றன.