புதுடில்லி: ‘பிபா’ கால்பந்து தரவரிசையில் இந்திய ஆண்கள் அணி இரண்டு இடம் முன்னேறி 104வது இடம் பிடித்தது.முன்னேறியது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில் கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. மொத்தம் 211 அணிகள் இதில் இடம் பெற்றுள்ளன.
சமீபத்தில் கோல்கட்டாவில் நடந்த ஆசிய கோப்பை மூன்றாம் கட்ட தகுதிச்சுற்று மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் அணி 106வது இடத்தில் இருந்து 104 வது இடத்துக்கு முன்னேறியது.
பிரேசில் ‘நம்பர்–1’
உலக அரங்கில் 4.87 புள்ளி கூடுதலாக பெற்ற பிரேசில் அணி, 1837.56 புள்ளியுடன் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் இருந்த பெல்ஜியம் (1821.92) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 3வது இடத்தில் அர்ஜென்டினா (1770.65) உள்ளது. உலக சாம்பியன் பிரான்ஸ் (1764.85) 3வது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
56
இந்திய பெண்கள் கால்பந்து அணியும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டது. 8.24 புள்ளி கூடுதலாக பெற்ற இந்திய அணி 1425.51 புள்ளிகளுடன் 59வது இடத்தில் இருந்து, 3 இடம் முன்னேறி 56வது இடம் பிடித்தது. அமெரிக்கா, சுவீடன், பிரான்ஸ் அணிகள், பெண்கள் கால்பந்தில் ‘டாப்–3’ இடத்தில் உள்ளன.