ஜகார்த்தா: இந்தோனேஷிய பாட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் பிரனாய் முன்னேறினார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் ‘சூப்பர் 1000’ பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், இந்தியாவின் பிரனாய், ஹாங்காங் வீரர் கா லாங் ஆங்கஸ் மோதினர்.
துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பிரனாய், முதல் செட்டை 21–11 என வசப்படுத்தினார். இரண்டாவது செட் சற்று இழுபறியாக இருந்த போதும், பிரனாய் 21–18 என கைப்பற்றினார். 41 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் பிரனாய் 21–11, 21–18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சமீர் வர்மா, மலேசியாவின் லீ ஜி ஜியாவை சந்தித்தார். இதில் சமீர் வர்மா 10–21, 13–21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
அஷ்வினி ஏமாற்றம்
பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி ஜோடி சீனாவின் சென் குயிங், ஜியா பான் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 16–21, 13–21 என தோல்வியடைந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, அர்ஜுன் ஜோடி, சீனாவின் சென் லியு, ஜுவான் லியு ஜோடியிடம் 19–21, 15–21 என்ற நேர் செட்கணக்கில் வீழ்ந்தது.