சென்னை: தேசிய தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றது தமிழகம். ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டியில் தங்கம் வென்று முத்திரை பதித்த தமிழகத்தின் சித்ரவேல், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை தனலட்சுமி.
சென்னையில் மாநிலங்களுக்கு இடையிலான சீனியர் தேசிய தடகள சாம்பியன்ஷிப் 61வது சீசன் நடந்தது. நேற்று ஐந்தாவது, கடைசி நாள் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான ‘டிரிபிள் ஜம்ப்’ போட்டி நடந்தது. தமிழகத்தின் 21 வயது வீரர் பிரவீன் சித்ரவேல், இரண்டாவது வாய்ப்பில் அதிகபட்சம் 17.18 மீ., துாரம் தாண்டி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். காமன்வெல்த் (16.56 மீ.,), உலக சாம்பியன்ஷிப் (17.14 மீ.,) போட்டிக்கு தகுதிக்கு தேவையான துாரத்தை விட அதிகம் தாண்டினார். இதையடுத்து உலக சாம்பியன்ஷிப் (ஜூலை 15–24, அமெரிக்கா), காமன்வெல்த் (ஜூலை 28–ஆக. 8, இங்கிலாந்து) விளையாட்டில் பங்கேற்க பிரவீன் தகுதி பெற்றார்.
* இரண்டாவது இடம் பெற்ற கேரளாவின் அப்துல்லா (17.14 மீ.,), உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி பெற்றார். எல்தோஷ் (16.81 மீ.,) காமன்வெல்த் விளையாட்டுக்கு மட்டும் தகுதி பெற்றார். தமிழக வீரர்கள் கெய்லி (16.00 மீ.,), விமல் (15.98 மீ.,) 5, 6வது இடம் பெற்றனர்.
தனலட்சுமி ‘தங்கம்’
பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தனலட்சுமி, கிரிதராணி, அசாமின் ஹிமா தாஸ் உட்பட 8 பேர் பங்கேற்றனர்.
சமீபத்தில் கேரளாவில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தனலட்சுமி, ஹிமா தாசை வென்றிருந்தார். இதனால் சென்னை தடகளத்தில் மீது எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், மீண்டும் அசத்திய தனலட்சுமி 23.27 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.
ஹிமா தாஸ், 23.29 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பிடித்தார். 0.02 வினாடி நேரத்தில் தங்கப்பதக்கம் கைநழுவியது. மஹாராஷ்டிராவின் ஐஸ்வர்யா (23.72 வினாடி) வெண்கலப் பதக்கம் பெற்றார். தமிழகத்தின் கிரிதராணி (24.78 வினாடி) 7வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் அசாமின் அம்லன் போர்கோஹெய்ன், 21.00 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் பெற்றார். கர்நாடகாவின் அபின் (21.42), மஹாராஷ்டிராவின் ராகுல் (21.68) வெள்ளி, வெண்கல பதக்கம் பெற்றனர். தமிழக வீரர் தமிழரசு 21.70 வினாடியில் வந்து 5வது இடம் பிடித்தார்.
‘தொடரில்’ வெள்ளி
பெண்களுக்கான 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் சுமத்ரா, ஒலிம்பியா, ரோஷினி, சுபா அடங்கிய அணி 3 நிமிடம், 42.39 வினாடியில் வந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றது. ஹரியானா (3 நிமிடம், 41.90 வினாடி) தங்கம் வென்றது.
லட்சுமணன் ‘ஆறு’
ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் டில்லியின் ஹரேந்திர குமார், 14 நிமிடம், 01.50 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார். ராஜஸ்தான் வீரர்கள் அமித் ஜாங்கிர் (14 நிமிடம், 02.01 வினாடி), தர்மேந்தர் (14 நிமிடம், 02.13 வினாடி) வெள்ளி, வெண்கலம் பெற்றனர். தமிழகத்தின் லட்சுமணன் (14 நிமிடம், 07.31 வினாடி) ஆறாவது இடம் பெற்று ஏமாற்றினார்.
ஆண்களுக்கான ‘ஹாமர் த்ரோ’ போட்டியில் தமிழகத்தின் ஷங்கர் (60.43 மீ.,), நிர்மல் (53.94 மீ.,) 6, 12வது இடம் பிடித்து ஏமாற்றினர். ராஜஸ்தான் வீரர் நீரஜ் குமார், 65.52 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
தமிழகம் சாம்பியன்
ஐந்து நாள் போட்டி முடிவில் பெண்கள் பிரிவில் 75 புள்ளிகள் பெற்ற தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. மொத்தம் 133.5 புள்ளிகள் பெற்ற தமிழக அணி, தேசிய தடகளத்தின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.
மீண்டும் வித்யா
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருந்த தமிழகத்தின் வித்யா, நேற்று நடந்த 400 மீ., தடை ஓட்டத்தில் அசத்தினார். 57.08 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் வென்றார். கேரளாவின் அனு (58.99 வினாடி), ஆரத்தி (59.26 வினாடி) அடுத்த இரு இடம் பெற, தமிழகத்தின் திவ்யா (1 நிமிடம், 00.08 வினாடி) 4வது இடம் பிடித்தார்.
* ஆண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார், 50.16 வினாடி நேரத்தில் வந்து, வெள்ளிப்பதக்கம் பெற்றார். தமிழகத்தின் பிரவின் குமார் (52.24 வினாடி) 6வது இடம் பெற்றார்.