கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., மோகன் பகான் அணியில் இருந்து ராய் கிருஷ்ணா விலகினார்.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடருக்கான கோல்கட்டா மோகன் பகான் அணியில் பிஜி வீரர் ராய் கிருஷ்ணா 34, இடம் பிடித்திருந்தார். முன்கள வீரரான இவர், கடந்த மூன்று சீசனில் (2019–20, 20–21, 21–22) மோகன் பகான் சார்பில் பங்கேற்ற 60 போட்டியில், 36 கோல் அடித்துள்ளார். சகவீரர்கள் கோல் அடிக்க 18 முறை உதவினார். ஐ.எஸ்.எல்., அரங்கில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். கடந்த 2020–21 சீசனில் அதிகபட்சமாக 15 கோல் அடித்த ராய் கிருஷ்ணா, அதிக கோல் அடித்தவருக்கான ‘கோல்டன் பால்’ விருது வென்றார். கடந்த ஆண்டு மோகன் பகான் சார்பில் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் ராய் கிருஷ்ணா, மோகன் பகான் அணியில் இருந்து விலகியதாக அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், எந்த அணிக்கு செல்ல உள்ளார் என்பது தெரியவில்லை. இவரை, ஈஸ்ட் பெங்கால் அணி ஒப்பந்தம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய முன்கள வீரர் டேவிட் வில்லியம்ஸ், மும்பை சிட்டி அணிக்கு சென்றுவிட்டார். தற்போது ராய் கிருஷ்ணாவும் விலகியதால் மோகன் பகான் அணிக்கு பின்னடைவாக அமையலாம்.