சென்னை: ‘‘முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,’’ என பிரக்ஞானந்தா தெரிவித்தார்.
செஸ் விளையாட்டின் மகுடம் செஸ் ஒலிம்பியாட். இதன் 44வது தொடர் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆக. 10 வரை நடக்கவுள்ளது. உலக சாம்பியன்கள், சூப்பர் கிராண்ட் மாஸ்டர்கள் என உலகின் பல நாடுகளில் இருந்து 1500–2000 பேர் பங்கேற்க உள்ளனர்.
இத்தொடரில் 2020ல் தங்கப்பதக்கத்தை இந்தியா, ரஷ்யா பகிர்ந்து கொண்டன. இம்முறை சொந்தமண்ணில் சாதிக்க திட்டமிட்டுள்ளது இந்தியா. தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் ஆண்கள், பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் 4 அணிகள் பங்கேற்கின்றன. தவிர இரு பிரிவிலும் மூன்றாவதாக மற்றொரு அணியை களமிறக்க இந்தியா முயற்சித்து வருகிறது.
இதுகுறித்து ‘செஸ்சபிள்’ மாஸ்டர்ஸ் தொடரில் இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவின் பிரக்ஞானந்தா 16, கூறுகையில்,‘‘செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்பதில் சற்று நெருக்கடி இருக்கும். முதன் முறையாக இத்தொடரில் பங்கேற்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். விரைவில் பயிற்சி முகாம் துவங்கவுள்ளது. முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்,’’என்றார்.
கொண்டாட்டம் இல்லை
மாஸ்டர்ஸ் தொடரில் கார்ல்சன், டிங் லிரென், அனிஷ் கிரி என முன்னணி வீரர்களை சாய்த்தது குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில்,‘‘மூவரும் சிறந்த வீரர்கள். இவர்களை வீழ்த்துவது எளிதல்ல. ஆனால் சர்வதேச அரங்கில் அவர்கள் சாதித்தவற்றுடன் ஒப்பிடுகையில், இது ஒன்றுமில்லை. இதனால் வெற்றியை கொண்டாடவில்லை,’’ என்றார்.
புதிய சாதனை
இந்தியாவில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் 343 அணிகள் பங்கேற்க உள்ளன. இது புதிய சாதனை. இதற்கு முன் 2018ல் 179 நாடுகள் சார்பில் 334 அணிகள் பங்கேற்றதே அதிகம்.
அகில இந்திய செஸ் கூட்டமைப்பு செயலர் பரத்சிங் சவுகான் கூறுகையில்,‘‘இந்திய தொடரில் பங்கேற்க 187 நாடுகள் பதிவு செய்துள்ளன. ஓபன் பிரிவில் 189, பெண்கள் பிரிவில் 154 அணிகள் பங்கேற்க உள்ளன,’’ என்றார்.