ஆமதாபாத்: ‘டி–20’ தொடரின் பைனலில் இன்று ராஜஸ்தான், குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் குஜராத் சாதித்தால், முதல் கோப்பை வெல்லலாம். ராஜஸ்தான் எளிதில் விட்டுத் தராது என்பதால், கடும் சவால் காத்திருக்கிறது.
இந்தியாவில் ‘டி–20’ கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. 10 அணிகள் மோதின. யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 முறை கோப்பை வென்ற மும்பை, 4 முறை சாம்பியன் ஆன சென்னை லீக் சுற்றுடன் திரும்பின.
73 போட்டி முடிந்த நிலையில் இன்று ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் பைனல் நடக்கிறது.
வெற்றி நம்பிக்கை
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் 14 ஆண்டுக்குப் பின் பைனலுக்கு முன்னேறியுள்ளது. தகுதிச்சுற்று 1ல் தோற்ற போதும், அடுத்து பெங்களூருவை வென்றது நம்பிக்கை தந்துள்ளது.
சர்வதேச அரங்கில் 1 ஒருநாள், 13 ‘டி–20’ என 20 போட்டிகளில் கூட கேப்டன் சஞ்சு சாம்சன் பங்கேற்கவில்லை. இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் சீரான ஆட்டத்தை தருவதில்லை. இத்தொடரில் 444 ரன் எடுத்த போதும், முக்கிய கட்டத்தில் அவுட்டாகி, ரசிகர்களை வெறுப்பேற்றி விடுகிறார். இன்று சாதித்து காட்டுவார் என நம்பலாம்.
துவக்கத்தில் பட்லர், ஜெய்ஷ்வால் (236) ஜோடி அசத்தலாம். தேவ்தத் படிக்கல் (374), ஹெட்மயர் (303) என பலர் ரன் சேர்க்க உதவுகின்றனர்.
சுழல் பலம்
இத்தொடரின் சிறந்த பந்துவீச்சை கொண்ட அணி என்ற பெருமை ராஜஸ்தானுக்கு உள்ளது. அதிக விக்கெட் சாய்த்த சகால் (26 விக்.,), அஷ்வின் (12) சுழல் கூட்டணி இன்று மிரட்டலாம்.
வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு (18 விக்.,) ஆமதாபாத் மைதானம் ராசியானது. இங்கு பங்கேற்ற 3 ஒரு போட்டியில் 9 விக்கெட் சாய்த்த இவர், தகுதிச்சுற்று 2ல் 3 விக்கெட் கைப்பற்றினார். இம்முறை டிரன்ட் பவுல்ட் (15) உடன் இணைந்து குஜராத் அணிக்கு பதிலடி தர காத்திருக்கிறார்.
புதிய கேப்டன்
இத்தொடரின் துவக்கத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் களமிறங்கியது குஜராத். காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, கேப்டனாக கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். பேட்டிங் (453 ரன்), பவுலிங் (5 விக்.,) மட்டுமன்றி கேப்டன் பணியிலும் அசத்த, அணியை ஜோராக பைனலுக்கு கொண்டு வந்துள்ளார்.
இன்று சொந்தமண்ணில் 1,10,000 ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்குவது கூடுதல் பலம். துவக்கத்தில் சுப்மன் கில் (438), ‘சீனியர்’ சகா (312) உதவுகின்றனர். 2012 முதல் ‘டி–20’ தொடரில் பங்கேற்கு மில்லர் (449) 2.0 ஆக அசத்துகிறார். டிவாட்டியாவும் (217) தன் பங்கிற்கு கைகொடுக்கிறார். பவுலிங்கில் இதுவரை 18 விக்கெட் சாய்த்த ‘சுழல்’ நாயகன் ரஷித் கான், ‘வேகத்தில்’ முகமது ஷமி, பெர்குசன் சாதிக்கலாம்.
கடந்து வந்த பாதை
குஜராத்
* லீக்சுற்றில் 14 போட்டியில் 10 வெற்றியுடன் (4 தோல்வி) 20 புள்ளிகள் பெற்று, பட்டியலில் முதலிடம் பிடித்தது.
* தகுதிச்சுற்று 1ல் ராஜஸ்தானை 7 விக்கெட்டில் வென்று, பைனலுக்கு தகுதி.
ராஜஸ்தான்
* லீக் சுற்றில் 14 போட்டியில் 9 வெற்றி, 5 தோல்வியடைந்து, 18 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது.
* தகுதிச்சுற்று 1ல் குஜராத்திடம் தோல்வி (7 விக்.,).
* தகுதிச்சுற்று 2ல் பெங்களூருவை 7 விக்கெட்டில் சாய்த்து, பைனலுக்கு முன்னேற்றம்.
பட்லர், சகால்
* ராஜஸ்தானின் பட்லர் இதுவரை 16 போட்டியில் 4 சதம், 4 அரைசதம் உட்பட 824 ரன் குவித்துள்ளார்.
* ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் சகால் அதிகபட்சம் 26 விக்கெட் சாய்த்துள்ளார்.
பாண்ட்யா, ஷமி
* குஜராத் சார்பில் அதிகபட்சம் ஹர்திக் பாண்ட்யா, 453 ரன் எடுத்துள்ளார்.
* பந்துவீச்சில் குஜராத்தின் முகமது ஷமி 19 விக்கெட் சாய்த்துள்ளார்.
மழை வந்தால்
மோசமான வானிலை, மழை காரணமாக இன்றைய பைனல் முழுமையாக பாதிக்கப்பட்டால், நாளை (‘ரிசர்வ் டே’) போட்டி நடக்கும்.
* ஒருவேளை இன்று போட்டி துவங்கிய பின் ஆட்டம் தடைபட்டால், மறுநாள், நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து போட்டி தொடரும்.
15 ஆண்டு
ராஜஸ்தான் அணி முதல் ஐ.பி.எல்., தொடரில் (2008) கோப்பை வென்றது. 2013, 2015, 2018ல் ‘பிளே ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது. அடுத்த 13 சீசன் பைனலுக்கு முன்னேறவில்லை. தற்போது 15வது சீசனில், அதாவது 15 வது ஆண்டில் மீண்டும் பைனலுக்கு முன்னேறியது.