புனே: பெண்களுக்கான ‘டி–20’ சேலஞ்ச் தொடரில் ஹர்மன்பிரீத் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணி கோப்பை வென்றது. பைனலில் 4 ரன் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணியை கடைசி ஓவரில் வீழ்த்தியது.
புனேயில், பெண்களுக்கான ‘டி–20’ சேலஞ்ச் கிரிக்கெட் 4வது சீசன் நடந்தது. இதன் பைனலில், வெலாசிட்டி, சூப்பர்நோவாஸ் அணிகள் மோதின. வெலாசிட்டி அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. சூப்பர்நோவாஸ் அணியில் மேக்னா சிங், வெங்கடேஷப்பா சாந்து நீக்கப்பட்டு மான்சி ஜோஷி, ராஷி கனோஜியா சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற வெலாசிட்டி கேப்டன் தீப்தி சர்மா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
சூப்பர்நோவாஸ் அணிக்கு பிரியா புனியா, டீன்டிரா டாட்டின் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்த போது சிம்ரன் பகதுார் பந்தில் பிரியா (28 ரன், 2 சிக்சர்) அவுட்டானார். ஸ்னே ராணா வீசிய 6வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்ட டாட்டின், ராதா யாதவ் பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் எட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ராதா வீசிய 14வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.
அபாரமாக ஆடிய டாட்டின், 44 பந்தில் 62 ரன் (4 சிக்சர், ஒரு பவுண்டரி) எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பூஜா (5) ஏமாற்றினார். ஹர்மன்பிரீத் (43) நம்பிக்கை தந்தார். சோபி எக்லஸ்டோன் (2), சுனே லுாஸ் (3), ஹர்லீன் தியோல் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.
சூப்பர்நோவாஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 165 ரன் எடுத்தது. அலானா கிங் (6) அவுட்டாகாமல் இருந்தார். வெலாசிட்டி சார்பில் கேட் கிராஸ், தீப்தி சர்மா, சிம்ரன் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
திரில் வெற்றி: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெலாசிட்டி அணிக்கு ஷபாலி வர்மா (15), யஸ்திகா பாட்யா (13) சுமாரான துவக்கம் தந்தனர். அபாரமாக ஆடிய லாரா அரைசதம் கடந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டன. சோபி எக்லஸ்டோன் வீசிய 20வது ஓவரில் 12 ரன் மட்டும் கிடைத்தன. வெலாசிட்டி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 161 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. லாரா (65), சிம்ரன் (20) அவுட்டாகாமல் இருந்தனர். சூப்பர்நோவாஸ் சார்பில் அலானா கிங் 3 விக்கெட் சாய்த்தார்.
சூப்பர்நோவாஸ் அணி, மூன்றாவது முறையாக (2018, 2019, 2022) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.