ஆமதாபாத்: ‘டி–20’ தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்றில் இன்று ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு செல்லும் என்பதால் ரசிகர்களுக்கு விறுவிறு மோதல் காத்திருக்கிறது.
இந்தியாவில் நடக்கும் ‘டி–20’ கிரிக்கெட் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஹர்திக் பாண்ட்யாவின் குஜராத் அணி, பைனலுக்கு முன்னேறிவிட்டது. ‘எலிமினேட்டர்’ போட்டியில் தோற்ற லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இன்று ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் இரண்டாவது தகுதிச்சுற்று நடக்கிறது. தகுதிச்சுற்று 1ல் தோற்ற ராஜஸ்தான், ‘எலிமினேட்டர்’ போட்டியில் வென்ற பெங்களூரு அணிகள் இதில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
டுபிளசி நம்பிக்கை
பெங்களூரு அணியை பொறுத்தவரையில் இதுவரை கோப்பை வென்றது இல்லை. 2009, 2011, 2016ல் பைனலுக்கு முன்னேறியது தான் அதிகபட்சம். இம்முறை டுபிளசி தலைமையில் சாதிக்க திட்டமிட்டுள்ள இந்த அணி, இன்று வென்று நான்காவது முறையாக பைனலுக்கு செல்ல காத்திருக்கிறது.
துவக்கத்தில் டுபிளசி (443 ரன்), கோஹ்லி (334) இருவரும் வேகமாக ரன் சேர்த்தால் நல்லது. ‘மிடில் ஆர்டரில்’ 49 பந்தில் சதம் விளாசிய ரஜத் படிதர் (7 போட்டி, 275), பின் வரிசையில் ‘பினிஷிங்’ செய்ய, வேகமாக ரன் சேர்க்க தினேஷ் கார்த்திக் (324) இருப்பது பலம். மேக்ஸ்வெல் (277) இன்று கைகொடுக்க வேண்டும்.
பந்துவீச்சில் ஹசரங்கா (25 விக்.,), ஹர்ஷல் படேல் (19), ஹேசல்வுட் (18) கூட்டணி வழக்கம் போல நம்பிக்கை தருகிறது. இன்றும் இது தொடரலாம்.
பட்லர் பலம்
ராஜஸ்தான் அணி முதல் ஐ.பி.எல்., தொடரில் கோப்பை வென்றது. இதன் பின் 2013, 2015, 2018ல் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. இன்று சாதிக்கும் பட்சத்தில் இரண்டாவது முறையாக பைனலுக்கு செல்லலாம்.
துவக்கத்தில் இதுவரை 718 ரன் குவித்த பட்லர் பெரும் பலமாக உள்ளார். ஜெய்ஷ்வால் (215), கேப்டன் சாம்சன் (421), தேவ்தத் படிக்கல் (365) என பலர் ரன் சேர்க்க உதவுகின்றனர்.
பந்துவீச்சில் சகால் (26 விக்.,), அஷ்வின் (11) கூட்டணி இன்று மீண்டும் சிறப்பாக செயல்படும் என நம்பலாம். தவிர கடந்த போட்டியில் கடைசி ஓவரில் 3 பந்தில் 3 சிக்சர் அடிக்கவிட்ட பிரசித் கிருஷ்ணா (15), பவுல்ட் (14) சுதாரித்துக் கொள்ள வேண்டும்.