புனே: ‘டி–20’ சேலஞ்ச் கிரிக்கெட் பைனலுக்கு ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா அணிகள் முன்னேறின.
புனேயில், பெண்களுக்கான ‘டி–20’ சேலஞ்ச் கிரிக்கெட் 4வது சீசன் நடக்கிறது. கடைசி லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ டிரையல்பிளாசர்ஸ், வெலாசிட்டி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வெலாசிட்டி அணி கேப்டன் தீப்தி சர்மா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
மந்தனா ஏமாற்றம்: இமாலய வெற்றியை நோக்கி களமிறங்கிய டிரையல்பிளாசர்ஸ் அணிக்கு மேக்னா, கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஜோடி துவக்கம் தந்தது. கேட் கிராஸ் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் மேக்னா. மந்தனா (1) ஏமாற்றினார்.
மேக்னா அபாரம்: பின் இணைந்த மேக்னா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி பொறுப்பாக விளையாடியது. தீப்தி சர்மா வீசிய 3வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டினார் ஜெமிமா. ராதா யாதவ் பந்தில் 2 சிக்சர் பறக்கவிட்ட மேக்னா, 32 பந்தில் அரைசதம் எட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜெமிமா, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன் சேர்த்த போது மேக்னா (73 ரன், 4 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டானார்.
ஜெமிமா நம்பிக்கை: சிம்ரன் வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஜெமிமா (66) நம்பிக்கை தந்தார். அடுத்து வந்த ஹேலி மாத்யூஸ் (27), சோபியா டங்க்லி (19) ஓரளவு கைகொடுத்தனர். டிரையல்பிளாசர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. ரிச்சா கோஷ் (1) அவுட்டாகாமல் இருந்தார். வெலாசிட்டி அணி சார்பில் சிம்ரன் 2 விக்கெட் கைப்பற்றினார்.
ஆறுதல் வெற்றி: கடின இலக்கை விரட்டிய வெலாசிட்டி அணிக்கு கிரண் பிரபு நவ்கிரே (69) ஆறுதல் தர, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 174 ரன் மட்டும் எடுத்து, 16 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
லீக் சுற்றின் முடிவில் மூன்று அணிகளும் தலா 2 புள்ளி பெற்றன. ‘ரன்–ரேட்’ அடிப்படையில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஹர்மன்பிரீத் தலைமையிலான சூப்பர்நோவாஸ் (0.912), தீப்தி வழிநடத்தும் வெலாசிட்டி (–0.022) அணிகள் பைனலுக்கு தகுதி பெற்றன. மந்தனாவின் டிரையல்பிளாசர்ஸ் அணி (–0.825) ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது.