பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மூன்றாவது சுற்றுக்கு ஸ்பெயினின் நடால், படோசா, அமெரிக்காவின் பெகுலா, ரஷ்யாவின் மெட்வெடேவ் உள்ளிட்டோர் முன்னேறினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் ரபெல் நடால், பிரான்சின் கோரென்டின் மவுடெட் மோதினர். அசத்தலாக ஆடிய நடால் 6–3, 6–1, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார். இது, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் நடால் பதிவு செய்த 300வது வெற்றியானது.
மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ், 6–3, 6–4, 6–3 என, செர்பியாவின் லாஸ்லோவை வீழ்த்தினார். ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 6–1, 6–7, 5–7, 7–6, 6–4 என, சகவீரர் ஆல்பர்ட் ரமோஸ்–வினோலசை போராடி வீழ்த்தி, 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
படோசா வெற்றி: பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, சுலோவேனியாவின் காஜா ஜுவான் மோதினர். இதில் படோசா 7–5, 3–6, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, உக்ரைனின் அன்ஹெலினா கலினினா மோதினர். அபாரமாக ஆடிய பெகுலா 6–1, 5–7, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா 2–6, 2–6 என பிரான்சின் லியோலியா ஜீன்ஜீனிடம் தோல்வியடைந்தார். கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6–4, 6–0 என அமெரிக்காவின் கேட்டி வோலினெட்சை வீழ்த்தினார்.
போபண்ணா ஜோடி அபாரம்
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானின் ஆன்ட்ரே கோலுபேவ், பிரான்சின் பேப்ரைஸ் மார்டின் ஜோடியை வீழ்த்தியது.
* மற்றொரு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அமெரிக்காவின் ஹன்டர் ரீஸ் ஜோடி 3–6, 2–6 என, நெதர்லாந்தின் வெஸ்லே கூல்ஹோப், பிரிட்டனின் நியால் ஸ்குப்ஸ்கி ஜோடியிடம் தோல்வியடைந்தது.
சானியா ஜோடி வெற்றி
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி 7–6, 6–2 என ஜெர்மனியின் லாரா சீக்மண்ட், மெக்சிகோவின் சான்டியாகோ கான்சலேஸ் ஜோடியை வென்றது.
* பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக்குடியரசின் லுாசி ஹிரடெக்கா ஜோடி 4–6, 6–2, 6–1 என, இத்தாலியின் ஜாஸ்மின், மார்டினா டிரேவிசன் ஜோடியை வீழ்த்தியது.