கல்லிதியா: கிரீசில் நடந்த சர்வதேச தடகள போட்டிக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
கிரீசில், 12வது சர்வதேச ‘ஜம்பிங்’ தடகள போட்டிகள் நடந்தன. இதில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர், அதிகபட்சமாக 8.31 மீ., துாரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கேரளாவை சேர்ந்த இவர், கடந்த மாதம் கோழிக்கோடுவில் நடந்த பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில் 8.36 மீ., துாரம் தாண்டி தேசிய சாதனை படைத்திருந்தார்.
அடுத்த இரு இடங்களை முறையே சுவீடனின் தோபியாஸ் மான்ட்லர் (8.27 மீ.,), பிரான்சின் ஜூல்ஸ் பொம்மெரி (8.17 மீ.,) பிடித்தனர்.
ஜெஸ்வின் ஏமாற்றம்: ஸ்பெயினில் நடந்த சர்வதேச தடகள போட்டிக்கான நீளம் தாண்டுதலில் ஏமாற்றிய தமிழகத்தின் ஜெஸ்வின் ஆல்ட்ரின், 7.69 மீ., துாரம் தாண்டி 5வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களை முறையே குரோஷியாவின் பிலிப் பிரவ்திவா (7.91 மீ.,), உருகுவேயின் எமிலியானோ லாசா (7.82 மீ.,), பெருவின் ஜோஸ் லுாயிஸ் மான்ட்ரோஸ் (7.77 மீ.,) கைப்பற்றினர்.