கோல்கட்டா: ஆசிய கிளப் கால்பந்தில் அரையிறுதி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு கோல்கட்டா மோகன் பகான் அணி தகுதி பெற்றது.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கிளப் அணிகளுக்கான ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதற்கான குரூப் ஸ்டேஜ் போட்டிகள் தற்போது நடக்கின்றன. ‘
டி’ பிரிவில் இந்தியாவின் கோல்கட்டா மோகன் பகான், ஐ–லீக் சாம்பியன் கோகுலம் கேரளா, வங்கதேசத்தின் பசுந்தரா, மாலத்தீவின் மஜியா அணிகள் இடம் பெற்றன.
கோல்கட்டாவில் நடந்த கடைசி லீக் போட்டியில், மோகன் பகான், மஜியா அணிகள் மோதின. போட்டியின் 26, 37வது நிமிடத்தில் ஜோனி கவுகோ தலா இரண்டு கோல் அடிக்க, மோகன் பகான் 2–0 என முந்தியது.
இரண்டாவது பாதியில் ராய் கிருஷ்ணா 56வது நிமிடம் ஒரு கோல் அடிக்க, 58 வது நிமிடம் சுபாஷிஸ், 71 வது நிமிடம் மெக்ஹக் தங்கள் பங்கிற்கு கோல் அடித்தனர்.
மஜியா அணி சார்பில் 45, 73வது நிமிடங்களில் பெட்ரோ கோல் அடித்து உதவினார். முடிவில் மோகன் பகான் அணி 5–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து ‘டி’ பிரிவில் மோகன் பகான் அணி 3 போட்டியில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளி பெற்று முதலிடம் பிடித்தது. வரும் செப். 6, 7ல் நடக்கவுள்ள மண்டலங்களுக்கு இடையிலான அரையிறுதி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது.