சென்னை: மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.
‘சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடரின் ஒரு பகுதியாக ‘செஸ்சபிள் மாஸ்டர்ஸ்’ ஆன்லைன் செஸ் தொடர் நடக்கிறது. இதில், நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உட்பட 16 பேர் பங்கேற்கின்றனர்.
உலகத் தரவரிசையில் 116வது இடத்திலுள்ள தமிழகத்தின் பிரக்ஞானந்தா, லீக் சுற்றில் கார்ல்சனை வீழ்த்தி 4வது இடம் பிடித்தார். அரையிறுதியில் ‘நம்பர்–8’ வீரர் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை சந்தித்தார். முதல் சுற்று ‘டிரா’ ஆனது. இரண்டாவது சுற்றில் அசத்திய 16 வயது வீரர் பிரக்ஞானந்தா, 33வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இத்தொடரின் முதன் முறையாக தோல்வியடைந்தார் அனிஷ் கிரி. மூன்றாவது சுற்றில் நெருக்கடியான சூழலில் இருந்து மீண்ட பிரக்ஞானந்தா, ‘டிரா’ செய்து அசத்த, 2.0–1.0 என முந்தினார். அடுத்த சுற்றை ‘டிரா’ செய்தால் போதும் என்ற நிலையில் பிரக்ஞானந்தா தோல்வியடைய ஸ்கோர் 2.0–2.0– என சமன் ஆனது.
இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய ‘டை பிரேக்கர்’ சுற்று நடந்தது.
இதன் முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 33வது நகர்த்தலில் வெற்றி பெற, மீண்டும் 3.0–2.0 என முந்தினார். அடுத்த போட்டியை பிரக்ஞானந்தா, ‘டிரா’ செய்தார். முடிவில் 3.5–2.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் உலக சாம்பியன், கார்ல்சன், 1.5–2.5 என சீன வீரர் டிங் லிரெனிடம் வீழ்ந்தார். பைனலில் பிரக்ஞானந்தா, ‘நம்பர்–2’ வீரர் டிங் லிரெனை சந்திக்கிறார்.
பரீட்சைக்கு நேரமாச்சு
பிரக்ஞானந்தா 11ம் வகுப்பு படிக்கிறார். தற்போது முழு ஆண்டு தேர்வு நடக்கிறது. இந்த நேரத்தில் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் தொடரில் பங்கேற்கிறார். இதுகுறித்து பிரக்ஞானந்தா கூறுகையில்,‘‘ அதிகாலை 2:00 மணி வரை செஸ் விளையாடுகிறேன். மறுநாள் காலை 8.45 மணிக்குள் பள்ளிக்கு செல்ல வேண்டும். தேர்வில் முடிந்தவரை துாங்காமல் இருக்க முயற்சித்து பரீட்சை எழுத முயற்சிப்பேன். எப்படியும் தேர்ச்சி பெறுவேன் என நம்புகிறேன்,’’ என்றார்.