ஜகார்த்தா: ஆசிய கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி, 2–5 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வியடைந்தது.
இந்தோனேஷியாவில் ஆண்களுக்கான 11வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வீணாக ‘டிரா’ செய்த இந்தியா, நேற்று ஜப்பானை சந்தித்தது.
இதில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடி இருந்ததால், இந்திய இளம் வீரர்கள் பல்வேறு தவறுகளை செய்தனர். பந்துகளை சரியானபடி சக வீரர்களுக்கு ‘பாஸ்’ செய்யாமல் விட, அனுபவ ஜப்பான் வீரர்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். 24வது நிமிடம் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில், ஜப்பானின் நகயோஷி ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 0–1 என பின்தங்கியது.
அடுத்தடுத்து கோல்
இரண்டாவது பாதியில் 40வது நிமிடத்தில் கோசெய் ஒரு கோல் அடிக்க, ஜப்பான் அணி 2–0 என முந்தியது. போட்டியின் 45வது நிமிடம் இந்திய வீரர் அபிஷேக் லக்ரா ஒரு கோல் அடிக்க, மறுபக்கம் ஜப்பானின் ரையோமா (49 வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். ஜப்பான் 3–1 என முன்னிலை பெற்றது.
அடுத்த நிமிடம் இந்திய வீரர் உத்தம் சிங் (50வது) ஒரு கோல் அடித்த போதும், 52வது நிமிடம் ராஜ்பர், 54வது நிமிடம் கார்த்தி செல்வம் ‘எல்லோ கார்டு’ பெற்று வெளியேற இந்தியா 9 வீரர்களுடன் விளையாடியது. வாய்ப்பை பயன்படுத்திய கோஜி (54வது) ஒரு கோல் அடிக்க, கோசெய் (56வது) 2வது கோல் அடித்தார். முடிவில் இந்தியா 2–5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இனி எப்படி
‘ஏ’ பிரிவில் 2 வெற்றி பெற்ற ஜப்பான் (6 புள்ளி) கோப்பை வெல்வதற்கான ‘சூப்பர்–4’ சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் (4), இந்தியா (1) அடுத்த இரு இடத்தில் உள்ளன. நாளை இந்தோனேஷியாவை அதிக கோல் வித்தியாசத்தில் இந்தியா வென்று, மற்றொரு போட்டியில் ஜப்பானிடம், பாகிஸ்தான் தோற்க வேண்டும்.
இப்படி நடந்தால் இந்தியா ‘சூப்பர்–4’ சுற்றுக்கு முன்னேறும். இல்லையெனில் 5 முதல் 8 வரையிலான இடத்தை பெற போட்டியிடும்.