புதுடில்லி: மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா.
‘சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடரின் ஒரு பகுதியாக ‘செஸ்சபிள் மாஸ்டர்ஸ்’ ஆன்லைன் செஸ் தொடர் நடக்கிறது. இதில், நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உட்பட 16 பேர் பங்கேற்கின்றனர்.
லீக் சுற்றில் அசத்திய தமிழகத்தின் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இதில் 4வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சீனாவின் இ வெய்யை சந்தித்தார். முதல் சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 90 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். அடுத்த சுற்றில் 78 வது நகர்த்தலில் வென்ற பிரக்ஞானந்தா, மூன்றாவது சுற்றில் 62வது நகர்த்தலில் வீழ்ந்தார். 4வது சுற்று 47வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.
இதையடுத்து 2.5–1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை சந்திக்கிறார். மற்றொரு அரையிறுதியில் கார்ல்சன், டிங் லிரென் (சீனா) மோதுகின்றனர்.