கோல்கட்டா: ‘டி–20’ தொடரின் முதல் தகுதிச்சுற்றில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் பட்சத்தில் குஜராத் அணி முதன் முறையாக பைனலுக்கு தகுதி பெறலாம்.
இந்தியாவில் நடக்கும் ‘டி–20’ கிரிக்கெட் லீக் தொடரின் 15 வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 70 லீக் போட்டிகள் முடிவில் குஜராத் (20 புள்ளி), ராஜஸ்தான் (18), லக்னோ (18), பெங்களூரு (16) அணிகள் ‘டாப்–4’ இடம் பிடித்து ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
‘நடப்பு சாம்பியன்’ சென்னை, மும்பை உட்பட 6 அணிகள் வெளியேறின. இன்று ‘பிளே ஆப்’ சுற்று துவங்குகிறது. கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் தகுதிச்சுற்று 1ல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடித்த குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
பாண்ட்யா பலம்
முதன் முறையாக களமிறங்கிய குஜராத் அணிக்கு, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பேட்டிங் (413 ரன்), பவுலிங் (4 விக்.,) என இரண்டிலும் ஜொலிக்கிறார். சரியான நேரத்தில், சரியான வீரர்களை பயன்படுத்தி அணியை வெற்றிக்கு கொண்டு செல்கிறார்.
துவக்கத்தில் சுப்மன் கில் (403) சில நேரங்களில் சறுக்கினால், ‘சீனியர்’ சகா (312) கைகொடுக்கிறார். மில்லர் (381), டிவாட்டியா (217)உதவுகின்றனர். பவுலிங்கில் இதுவரை 18 விக்கெட் சாய்த்த ரஷித் கான் ‘சுழல்’, முகமது ஷமி (18) ‘வேகம்’, பெர்குசனின் (12) ‘ஆல் ரவுண்டர்’ திறமை அணிக்கு உதவுவது உறுதி. கடைசி 5 போட்டியில் 3ல் தோற்றது சற்று பலவீனம்.
பட்லர் பலமா
முதல் தொடரில் (2008) சாம்பியன் ஆனது ராஜஸ்தான். இம்முறை அதிக ரன் எடுத்த வீரர் பட்லர் (629 ரன்), அதிக விக்கெட் சாய்த்த பவுலர் சகால் (26 விக்.,) என இருவரும் அணியில் இருப்பது பலம். இதுவரை 3 சதம், 3 அரைசதம் விளாசிய பட்லர், கடைசி 5 போட்டியில் 22, 30, 7, 2, 2 என 63 ரன் மட்டுமே எடுத்துள்ளார்.
கேப்டன் சஞ்சு சாம்சன் (374), தேவ்தத் படிக்கல் (337), ஹெட்மயர் (297), இளம் வீரர் ஜெய்ஸ்வால் (212), ரியான் பராக் (164) சீரான ரன்குவிப்பை தருகின்றனர்.
பந்துவீச்சில் 11 விக்கெட் சாய்த்த அஷ்வின் (பேட்டிங்கில் 183 ரன்), சகால் கூட்டணி மிரட்டுகிறது. வேகப்பந்து வீச்சில் டிரன்ட் பவுல்ட் (13). பிரசித் கிருஷ்ணா (15), குல்தீப் சென் (8), மெக்காய் (7) உதவினால் பைனலுக்கு செல்லலாம்.
மழை வந்தால்...
‘பிளே ஆப்’ சுற்றில் மோசமான வானிலை, மழை காரணமாக போட்டிக்கு சிக்கல் ஏற்பட்டால், வெற்றியாளரை முடிவு செய்ய விதிமுறை வெளியாகின.
இதன்படி,
* எலிமினேட்டர், இரண்டு தகுதிச்சுற்று போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டால், முடிந்தவரை தலா 5 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்படும்.
* இதற்கு வழியில்லாத பட்சத்தில் ‘சூப்பர் ஓவர்’ முறையில் வெற்றியாளர் முடிவு செய்யப்படும்.
* முற்றிலும் போட்டி நடக்கவில்லை எனில், லீக் சுற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருந்த அணி வென்றதாக அறிவிக்கப்படும்.
* மே 29ல் நடக்கும் பைனல், மழையால் முழுவதும் பாதிக்கப்பட்டால் மறுநாள் மே 30ல் (‘ரிசர்வ் டே’) போட்டி நடக்கும்.
* ஒருவேளை முதல் நாள் போட்டி துவங்கிய பிறகு தடை பட்டால், மறுநாள், நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து போட்டி தொடரும்.